இறுதிப்போரில் பங்கெடுத்த தளபதிகளை கைவிடுகிறது அரசு – மகிந்த குற்றச்சாட்டு
இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய மூத்த இராணுவ அதிகாரிகள் பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில், நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதல்முறையாக மகிந்த ராஜபக்ச நேற்று உரையாற்றினார்.
இதன் போது அவர், ‘இந்த இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெறும் போது, இராணுவத்தின் பாதுகாப்பையும், நிறுவன ரீதியான ஆதரவையும் இழக்க வேண்டியேற்படும். போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசப்படும் தருணத்திலேயே இந்த அதிகாரிகளை ஓய்வில் அனுப்பப்படுகின்றனர்.
வேண்டுமென்றே இந்த அதிகாரிகள் கைவிடப்பட்டுள்ளனர் என்பதையே இது தெளிவாக காட்டுகிறது. ஆபத்து நீங்கும் வரை இந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.