புதிய கட்சி உருவாவதை எவராலும் தடுக்க முடியாது - மகிந்த ராஜபக்ச
கட்சிகளின் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டினால், அவர்களை இணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதை எவராலும் தடுக்க முடியாது போகும் என நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊருபொக்க, ஹெரகஸ்மண்டிய பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அப்படியான அணிகள் இணைந்து வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது அனைவரதும் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் புதிய அரசியல் கட்சி உருவாகாது எனக் கூறமுடியாது.கட்சிகளில் இருந்து விரட்டப்பட்டால் அவர்கள் செல்வதற்கும் இடம் ஒன்று தேவை. வலுவான எதிர்க்கட்சியை உருவாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சியில் உள்ள நடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய தயாராக இருப்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று அரசியலில் இருந்த போதிலும் கட்சியை காட்டிக்கொடுக்காத ஒரே நபர் நான்.
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் போனால்அரசாங்கம் தவறாக செல்லும். இந்த அரசாங்கத்திற்கு சரியான வழியை காட்ட வலுவான எதிர்க்கட்சி அவசியம் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.