எவன்காட் வருமானம் மறைக்கப்பட்டுள்ளது - ராஜித
முன்னைய அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பெருமளவு நிதிகளை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சுவிசர்லாந்தின் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது.
இதற்கான யோசனை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்பட்டு அதனை அமைச்சரவை ஏற்றுக் கொண்டதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.இதன்படி, சுவிசர்லாந்தில் பாசல் என்ற இலாபம் உழைக்காத நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது.
சுவிசர்லாந்து அரசாங்கத்திடம் கேட்டு கொண்டமைக்கு இணங்கவே இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த நிறுவனம் உலகளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இடம் பெறும் ஊழல்களை இனங் கண்டு தீர்வை தரும் அமைப்பாக செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனம் உடன்படிக்கையின் படி, இலங்கைக்கும் உதவிகளை வழங்கவிருக்கிறது.இதேவேளை, ஏற்கனவே டுபாயிலும் வைப்பு செய்யப்பட்டுள்ள நிதி வெளிக் கொணரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.அத்துடன் சிங்கப்பூரில் வைப்பு செய்யப்பட்டுள்ள நிதி ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, எவன்காட் நிறுவனத்திற்கு நாள் ஒன்றிற்கு 2 கோடி ரூபா வரையும் வருமானம் கிடைத்திருக்கிறது.எனினும் வருமானமாக முன்னைய அரசாங்கத்தினால் 25 லட்சம் ரூபா மாத்திரமே என கணக்கு காட்டப்பட்டுள்ளது.இதன்படி, மிகுதியுள்ள ஒருகோடிக்கும் அதிகமான பணம் எந்த நாட்டில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ச, தனி ஒருவர் இரண்டு கோடி ரூபாவை வருமானமாக பெறுவதை பார்த்து கொண் வெறுமனே இருக்கும் ஒருவர் அல்லவென்றும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
இதன் மூலம் யார் இந்த விடயத்தில் பின்னால் இருந்து செயற்பட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.இதற்கிடையில் எவன்காட் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் இடம் பெறும் போது அது குறித்து உரையாற்றுமாறு கோட்டபய ராஜபக்ச ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கிய பட்டியல்படி குற்றம் சுமத்தப்படாதவர்கள், சிறு குற்றங்களை புரிந்தவர்கள், தகவல் தெரிவிக்காதோர் அடங்கியிருந்தனர்.
இதனை பார்க்கும் போது தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருமே விடுதலை செய்யப்பட கூடியவர்கள் என அவர குறிப்பிட்டார்.இதேவேளை, குற்றம் செய்தவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதில் எந்த தவறும் இல்லை.
ஜே.வீ.பியினர் விடுவிக்கப்பட்ட போது அவர்கள் சிங்களவர்கள் என்பதனாலா விடுவிக்கப்பட்டார்கள் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு குற்றங்கள் செய்யாதவர்களை விடுவிக்காத சட்டமா அதிபர் திணைக்களம் குற்றங்கள் சுமத்தப்பட்டவர்களை விடுவித்திருப்பதாக ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
கே.பி என்ற குமரன் பத்மநாதனும் இதன் கீழேயே பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் கையெழுத்துடன் 95 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் பிரதானமானவர் விடுதலைப்புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானின் பணிப்புரையின் பேரில் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்று தெஹிவளையிலுள்ள வங்கி ஒன்றின் ஊடாக விடுதலைப்புலிகளுக்கு பணத்தை வழங்கி வந்த முரளி சிவஞானம் மொரிசன் என்பவராவார்.
இவர் பெரும்பாலும் கே.பியின் பரிந்துரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.கொழும்பில் தாக்குதல்களை நடத்துவதற்காக வந்திருந்த விடுதலைப்புலிகளுக்கு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருப்பிட வசதிகளை செய்து கொடுத்த விடுதலைப்புலிகளின் புலனாய்வு தலைவர்களில் ஒருவரான கபிலனின் நண்பரான நடராசா சிவராசா என்பவராவார்.
1992 ஆம் ஆண்டு சண்முகம் பாஸ்கரன், அந்தோனிமுத்து அருள்ஜோன்சன், செல்வராசா நகுலேஸ்வரன் கொழும்பில் புலனாய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் புலனாய்வு தலைவர்களின் ஒருவரான சாள்சின் பாதுகாப்பு அதிகாரியான செல்வராசா நகுலேஸ்வரன் உட்பட்ட 95 பேரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும், இந்த தகவல் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்தோ? அல்லது காவற்துறையிடமிருந்தோ? கடந்த நொவம்பர் 24 ஆம் திகதி வரை புதிய அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கவில்லை என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டவர்களே இன்று தேசிய பாதுகாப்பு குறித்து பேசுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.