கடற்படை வாகனம் மோதி உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!
வேலணை புளியங்குடல் பகுதியில் கடற்படை வாகனம் மோதி உயிரிழந்த மாணவியின் குடும்பத்திடம் செல்லும் புலனாய்வாளர்கள், குறித்த வழக்கை வாபஸ் பெறுமாறு குடும்பத்தை அச்சுறுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலணை புளியங்குடல் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) கடற்படை வாகனம் மோதியதில் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த மாணவி உ. உசாந்தி உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த விபத்துச் சம்பவத்தினை நீதிமன்ற வழக்கு ஆக்க வேண்டாம் என்றே புலனாய்வாளர்கள் அவர்களை அச்சுறுத்தி வருவதுடன், எவ்வளவு பணம் கொடுப்பதாகவும் பேரம் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவி உயிரிழந்தமைக்குக் காரணமான கடற்படை சிப்பாய் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த மாணவியின் குடும்பம் நாளாந்தம் கிடைக்கும் கூலி வேலைக்குச் செல்லும் தந்தையும், தாயும் கொண்டுவரும் சிறு ஊதியத்திலேயே தமது அன்றாட வாழ்க்கையினை கொண்டு நடத்தும் நிலையில் இருந்துள்ளனர்.
இதனை கண்டுகொண்ட புலனாய்வாளர்கள் நீதிமன்ற வழக்கினை தள்ளுபடி செய்யும் நோக்கில் அக் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் சமரசம் பேசும் முயற்சியில் நேற்று முழுவதும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமரசத்திற்கு ஒத்துக் கொள்ள குடும்பத்தினர் மறுத்ததை அடுத்து ஈழப்பீடாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும், கடற்படையினரிடம் இருந்து பெற்றுத்த தருவோம் என்றும். சடலத்தினை வைத்திய சாலையில் இருந்து இலகுவான முறையில் மீளப் பெற்று இறுதிக்கிரிகைக்கான பணத்தினைத் தருவதாகவும் கூறி புலனாய்வாளர்கள் சமரசம் பேசும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், மகளின் உயிரினைப் பறிகொடுத்த அவர்கள் புலனாய்வாளர்களுடைய சமரச பேச்சிற்கு இடம் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.