திருமண வைபவத்திற்கு சென்றதால் மஹிந்தவுக்கு நாடாளுமன்றம் செல்ல முடியவில்லையாம்
இரண்டு திருமண நிகழ்வுகளில் சாட்சி கையொப்பமிடுவதற்கு சென்ற காரணத்தாலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றம் செல்லமுடியவில்லையென அவருடைய ஊடக பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
எனினும், முன்னாள் நிதியமைச்சர் என்ற ரீதியில் வரவு – செலவு திட்டம் தொடர்பில் உரையாற்றுவதற்கு மஹிந்தவுக்கு 5 நிமிட நேரம்கூட ஒதுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டையும் அவரது ஊடகப்பேச்சாளர் முன்வைத்துள்ள அதேவேளை, இதுகுறித்து ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் மஹிந்த கலந்துகொள்ளாமை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே, அவர் தரப்பிலிருந்து இந்த பதில் வந்துள்ளது.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மஹிந்த சமூகமளிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.