ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் இன்று ஆர்ப்பாட்டம்
காணாமல் போனோர் தொடர்பில் உள்ளக விசாரணை வேண்டாம் என்றும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதையடுத்து, மண்டபத்திற்கு முன்னாள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியும் தற்போதைய மைத்திரி ஆட்சியும் ஒன்றாகவே காணப்படுவதாக குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒளித்துவைக்கப்பட்ட யானைகளை தேடி கண்டுபிடிக்கும் இந்த அரசாங்கம், காணாமல் போன மனிதர்களை கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.
குறிப்பாக காணாமல் போன ஒரு பிள்ளை ஜனாதிபதி மைத்திரியின் புகைப்படமொன்றில் இருப்பதை அறிவித்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல ஆதாரங்களையும் அரசாங்கத்திற்கு கொடுத்தும் இதுவரை கண்டுபிடித்து தருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லையென, காணாமல் போனோரின் உறவினர்கள் இதன்போது குற்றஞ்சுமத்தினர்.
காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருவார் என்ற நம்பிக்கையிலேயே மைத்திரிக்கு வாக்களித்ததாக தெரிவித்த இவர்கள், தமது எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் ஐ.நா அனுசரனையில் சர்வதேச விசாரணையே தமக்கு வேண்டுமென வலியுறுத்தினர்.