Breaking News

மஹிந்த ஆட்சிபீடமேற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் : சம்பிக்க


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, ராஜபக்ஷ பரம்பரையில் யாரையும் இனிமேல் ஆட்சிக்கு வர இடமளிக்க மாட்டோம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் பெருநகர அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல அபேகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-

‘ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்து சென்றாலும் அவர்களது அரசாங்க முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. எதிர்காலத்தில் அதனையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் உள்ளிட்ட விடயங்களுக்கு துணைபோக விரும்பாத காரணத்தாலேயே அவர்களிடமிருந்து விலகினோம்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததனைப் போன்று, இந்த அரசாங்கத்தை கொண்டு நடாத்த முழு அளவில் ஆதரவளிக்கப்படும்.

தற்போது நாட்டில் நிலவிவரும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பணிப் புறக்கணிப்புக்கள் யாவும், கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்டதாகும். இந்த நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கொண்டுநடத்த முழு ஆதரவையும் வழங்குவோம்’ என தெரிவித்தார்.