கட்சியில் இருப்பதா? விலகிச் செல்வதா? மகிந்த அறிவிக்க வேண்டும்!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக பணியாற்றி, கட்சியின் வெற்றிக்கு வழிவகுப்பதா, அல்லது கட்சியை விட்டு விலகிச் சென்று புதிய கட்சியை ஸ்தாபிப்பதா என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டு விலகிச் சென்று புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான எவ்வித அடிப்படை காரணமும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இல்லை எனவும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவருக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதாக அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் பலமொன்று இருப்பதாகவும், வலுவான எதிர்க்கட்சியொன்றை உருவாக்க அனைவரது பொறுப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஊருபொக்க, ஹொரகஸ்மண்டிய பிரதேசத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமொன்றைத் திறந்துவைத்த நிகழ்விலேயே மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்திருந்தார்.
கட்சியைக் காட்டிக்கொடுத்தவர்களே தற்போது அரசியலில் இருப்பதாகவும் கட்சியைக் காட்டிக்கொடுக்காத ஒரே நபர் தான் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
''ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனது கட்சி. நான் ஒருவரே கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்சியைக் காட்டிக்கொடுக்காத ஒரே நபர் நானாவேன். கட்சியைக் காட்டிக்கொடுத்தவர்களே தற்போது அரசியலில் இருக்கின்றனர். நான் காட்டிக்கொடுக்கவில்லை. காட்டிக்கொடுக்கப் போவதும் இல்லை'' என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி-