மஹிந்த செய்தது சரியெனில் நான் செய்வது தவறா?- ஜனாதிபதி சபையில் கேள்வி
கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் பிள்ளையானை முதலமைச்சராகவும் நியமித்து கே.பி.யை பாதுகாத்ததுடன் புலிப்பயங்கரவாத போர்க்களத்தில் நின்றிருந்த 12000 புலி உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்தது சரியென்றால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் இருந்தவர்களை நான் பிணையில் விடுவித்தது தவறா? என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சபையில் கேள்வியெழுப்பினார்.
“கபடத்தனமான அரசியல்வாதிகளின் இறுதிப் புகலிடமே தேசப்பற்று” என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு தெரிவித்திருப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை யுத்தம் நிறைவடைந்த ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதையும் அவர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதையும் முன்னைய அரசாங்கம்தவறவிட்டு விட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்கும் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றுவிக்கப்படாதிருப்பதற்குமான செயற்றிட்டங்களை முன்னெடுத்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதையே எமது அரசாங்கம் செய்து வருகின்றது என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட விவாதத்தில் இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தின பாதுகாப்பு அமைச்சின் மீதான குழு நிலையில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்
யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளை இதன் பிரதானியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் அவருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய முப்படை பிரதானிகள், படைவீரர்கள் ஆகியோருக்கும் அதேநேரம் அர்ப்பணிப்புக்களை செய்த நாட்டு மக்களுக்கும் அதன் கௌரவம் உரித்தாகின்றது என்பதனை தெரிவிக்கின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. . எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் மனங்கள் வெல்லப்படவில்லை. அந்த மக்களின் நம்பிக்கையை காட்டியெழுப்புவதற்கு முன்னைய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை.
முன்னைய அரசாங்கம் செய்யத் தவறிய விடயங்களின் பின்னணியில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்றெல்லாம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அங்குள்ள மக்களிடமிருந்த இராணுவத்தின் மீதான வெறுப்பு விடுப்பட்டிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட அந்த மக்களிடத்தில் மகிழ்ச்சி இருக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு வரையில் அந்த மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான நிலையில் தான் எமது புதிய அரசாங்கம் இவற்றை நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் பேரில்தான் வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்துப் பகுதி மக்களும் இணைந்து வாக்களித்திருந்தனர். இதன் பிரகாரமே தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் செயற்பட்டோம். அதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை தலைமையாகக் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய நல்லிணக்கம் எனும் போது அனைத்துத் தரப்பினருடனான பேச்சுகளின் ஊடாக அது இடம்பெற வேண்டியதாக இருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டதான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் சிபாரிசும் இந்நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன.
சிறைக்கைதிகள் சிலரை பிணையில் விடுதலை செய்தது தொடர்பில் இங்கு கருத்து வெளியிட்டு வருகின்ற சிலர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறிவருகின்றனர். இது அடிப்படைவாதிகளின் கருத்தாகும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ஜவகர்லால் நேருவினால் பேசப்பட்ட ஒரு விடயம் எனக்கு இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது. அவர் பேசுகையில் “கபடத்தனமான அரசியல்வாதிகளின் இறுதிப்புகலிடமே தேசப்பற்று” என்று கூறியிருந்தார். எனவே எம்மிடத்தில் அடிப்படைவாதம் வேண்டாம். அப்பாவி மக்களிடத்திலும் பௌத்த மதத்தைக் கடைபிடித்து வருவோரின் மனங்களிலும் இவ்வாறான குரோதங்களை விதைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
புலிப்பயங்கரவாத அமைப்பின் பிரதானியாக இருந்த கருணா அம்மானை பிரதியமைச்சராக்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகவும் நியமித்தார். அதேபோன்று புலிகளில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ புலிகளின் அமைப்புக்கு ஆயுதம் விநியோகித்தவரும் அவ்வமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து கப்பல்களையும் பெருந்தொகைப் பணத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த கே.பி.யையும் பாதுகாத்துள்ளார். இவையனைத்தையும் நாம் தவறென்று கூறவில்லை.
தேசிய நல்லிணக்கத்துக்கு இது முன்னுதாரணமாகும். அதனை நாம் ஏற்கின்றோம். அதுமாத்திரமின்றி ஆயுதம் ஏந்தி யுத்த களத்தில் போரிட்ட புலிப் பயங்கரவாதத்துடன் நேரடித் தொடர்புடைய 12000 பேரையும் முன்னாள் ஜனாதிபதி விடுதலை செய்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு புலிகளுடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வாராக இருந்தால் கருணா அம்மானை சு.க.வின் உபத்தலைவராக நியமிப்பாராக இருந்தால் பிள்ளையான முதலமைச்சராக நியமிப்பாராக இருந்தால் கே.பியைப் பாதுகாப்பாராக இருந்தால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் இருந்தோரை நான் விடுதலை செய்ததுதான் தவறா?
இங்குள்ள ஒவ்வொருவரும் மனசாட்சியைத் தொட்டு இதற்குப்பதில் கூறவேண்டும். இனவாதத்தை தூண்டிவிட முடியும். இனவாதம் எம்மாலும் பேச முடியும். இனவாதம் பேசி எம்மாலும் அரசியல் செய்ய முடியும். எனினும் அவை எதிர்காலத்துக்கு சாபகேடாகவே அமையும். அவ்வாறு பாவத்தை செய்வதற்கு நாம் தயாரில்லை.
இந்நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திவிடக்கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என்றார்.