தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல - சுரேஷ்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையான்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்க படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தம் என்பதோ அல்லது ஒற்றையாட்சியோ நிச்சயமாக ஏற்றக்கொள்ளப்பட முடியாது. அது இனப்பிரச்சனைக்கான தீர்வல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைளை பிரதமர் மேற்கொண்டு வரும் நிலையில், இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கைலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுரேஷ் பிரேமசந்திரன் தொடர்ந்து கருத்து வௌியிடும் போது,
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா 13ஆம் திருத்தத்தின் அடிப்படியில் தீர்வை முன் வைக்கும் எனும் கருத்தை முன் வைத்துள்ளார்.
13ம் திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு திட்டத்தை முன் வைக்கும் யோசனை என்பது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பகிர்வு சாத்தியமற்றது. எனவே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயத்தையே அமைச்சர் பேசியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. அவர்களும் ஒற்றையாட்சிக்குள் இந்த பிரச்சனையை தீர்க்க தான் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க உள்ள கால கட்டத்தில் முதலில் அரசாங்கம் தமிழர் தரப்புடன் பேச வேண்டும். தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல. அவர்கள் ஒரு தேசிய இனம். எனவே அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அதன் அடிப்படையில் தமிழர்களுக்கான அதிகாரங்கள் பகிர படவேண்டும்.
ஆகவே கிடைக்க வேண்டிய தீர்வு என்பது நீடித்து நிலைக்ககூடிய வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் தீர்வாக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.