வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டாமென மஹிந்தவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாம்!
வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியதனாலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் என்ற பெயரில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாதென குறிப்பிட்ட அவர், கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்தவை பங்கேற்க வேண்டாமென கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிய போதும், பிழைகளை திருத்திக்கொள்ள அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலேயே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தாக டளஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.