நல்லிணக்கத்தைக் குழப்பவே வடக்கில் அமைப்புக்களை உருவாக்குகின்றனராம்!
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் அரசாங்கம் செயற்பட்டு வரும்போது வடக்கில் உள்ள சில இனவாத சக்திகள் கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளன.
ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு வடக்கில் சில இனவாத சக்திகள் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் குழப்புவதற்கு முயற்சிக்கின்றன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த இனவாத சக்திகளின் செயற்பாடுகளினால் நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட் டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்
சிறுபான்மை மக்கள் இன்று மிகவும் நிம்மதியாக வாழ்கின்றனர். வடக்கில் தாய்மாரும், மனைவிமாரும் அச்சமின்றி வாழ்கின்றனர். அந்த சூழ்நிலையை நாங்கள் உருவாக்கினோம். முஸ்லிம் மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்கின்றனர்.வடக்கு மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிக அக்கறை கொண்டுள்ளோம். அந்த மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை, மற்றும் காணி விவகாரங்களை தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கும்.
விசேடமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.இதன் மூலம் நல்லிணக்கமும் தீர்வும் ஏற்படுவதற்கு இவ்வாறு நாங்கள் கூட்டமைப்புடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்ற போது வடக்கில் உள்ள சில இனவாத சக்திகள் கூட்டமைப்பு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு வடக்கில் சில இனவாத சக்திகள் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் குழப்புவதற்கு முயற்சிக்கின்றன.அமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் அரசியல் கட்சிகளை தொடங்குவதற்கு இனவாத சக்திகள் வடக்கில் முயற்சிக்கின்றன.
அதேபோன்று தெற்கிலும் இனவாத சக்கதிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றன.இந்த இனவாத சக்திகளின் செயற்பாடுகளினால் நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது என்றார்.