போரினால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை மாற்றியமைப்போம்! நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இயேசு கிறிஸ்துவின் பிறப்போடு மனிதாபிமானத்தின் பெறுமானங் களை மனதிற்கொண்டு எமது நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால போரின் போது பாதிக்கப்பட்ட மக்களை நாடிச் சென்று அவர்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்க கைகொடுப்போம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,
நத்தார் பண்டிகை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அன்பு மற்றும் அறம் பற்றிய பாடங்களை எமக்குப் போதிக்கும் ஒரு பலமான குரலைக் கொண்ட இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசு பாலகர் செம்மறி ஆடுகளுக்கு மத்தியில் ஒரு தொழுவத்தில் பிறந்து இடையர்களே அவருக்கு முதல் காணிக்கை செலுத்தியதிலிருந்து மனிதாபிமானம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு மற்றும் பணிவு பற்றிய கிறிஸ்தவச் செய்தியை கண்டுகொள்ளமுடியும்.
இயேசுவின் தத்துவம் நித்தியமானதும் பிரபஞ்சம் தழுவியதுமாகும். ஒருவரது நம்பிக்கைக்குப் புறம்பாக நாம் எல்லோரும் எமக்கும் ஒருவர் மற்றவருக்கும் இந்த உலகில் உண்மையானதும் நீடித்ததுமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு கடமை உணர்வைக் கொண்டுள்ளோம்.
நத்தார் உணர்வையும் அது உட்பொதிந்துள்ள கொடை, பகிர்வு, மன்னிப்பு மற்றும் ஏனையவர்களைப் பராமரித்தல் ஆகிய மனிதாபிமான பெறுமானங்களை மனதிற்கொண்டு இலங்கையில் முப்பது வருடகால போரின்போது பாதிக்கப்பட்ட மக்களை நாடிச்சென்று அவர்களது வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்ற கைகொடுப்போம்.
இயேசுவின் பிறப்பு அவர் இந்த உலகிற்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு பற்றிய புதிய போதனைகளுடன் மானிட விடுதலைக்கான வழியைக்காட்டுகிறது. நத்தார் மணி எழுப்பும் நாத ஓசையும் பண்டிகைத் திருப்பாடல் ஒலிகளும் இப்பண்டிகையையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் குறித்து நிற்கிறது.
இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த எனது நத்தார் வாழ்த்துக்கள்.