செந்துாரனின் குடும்பத்திற்கு அச்சுறுத்தல்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவன் செந்துாரனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளர்.
குறித்த மாணவனின் குடும்பத்திற்கு பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், மற்றும் படையினரின் அச்சுறுத்தல்கள் காணப்படுவதனால் அவர்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் செந்துாரன் எழுதிய கடிதத்தில் காணப்படும் எழுத்து அவருடையதா என்பதை அறிந்து கொள்வதற்காக, உயிரிழந்த மாணவரின் பாடசாலை அப்பியாச கொப்பிகளில் காணப்படும் எழுத்தினை பொலிஸார் பரிசோதித்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி கொக்குவில் இந்துக்கல்லுாரியில் கல்வி கற்கும் மாணவன் செந்துாரன் கோண்டாவில் புகையிர நிலையத்திற்கு அருகில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.