வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக உறவுகளுக்கு வடக்கு முதலமைச்சர் அனுதாபம்
இந்தியா – சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண அமைச்சர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண அமைச்சர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவாறு பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சென்னையிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், யுத்ததினால் தமிழ் மக்கள் உயிரிழந்த போது தமிழக மக்களே தொடர் போராட்டங்களை மேற்கொண்டதை மறந்து விடக் கூடாது எனவும் தெரிவித்தார்.