யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை! - பகிடிவதை காரணம் என சந்தேகம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்ற 21 வயதுடைய தவராசா குபேரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் தொடர்பில் உறுதியாக தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் பல்கலைக்கழகத்தில் குறித்த மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக மனம் நொந்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன், நேற்று முன்தினம் தனது வீட்டில் தனிமையில் இருந்த போதே அறையொன்றினுள் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலைச் செய்துகொண்டுள்ளார்.
மாணவன் அவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ள வீட்டார் உடனடியாக அவனை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது மாணவனின் உயிர் பிரிந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து விஷேடமாக அவதானம் செலுத்தியுள்ள பருத்தித்துறை பொலிஸர் தற்கொலைக்கு பகிடி வதையா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை பகிடிவடை காரணமாகவே மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கு மாணவனின் தந்தையாரான தவராசா (கிராம சேவகர்) கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.