இலங்கை மீண்டும் சர்வதேசத்தை வென்றுள்ளது – சபையில் மங்கள
சர்வதேச மட்டத்தில் இலங்கை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துக்கொண்ட ஜனநாயக நாடாக மாறியுள்ளதுடன், மீண்டும் சர்வதேசத்தை வென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இன்று (புதன்கிழமை) பாராளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவு இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘ஜனவரி எட்டாம் திகதி நாட்டின் அரசியல் பாதை முற்றுமுழுதாக மாற்றப்பட்டது. சர்வாதிகார ஆட்சியை நிறுத்தி நீதியான பாதையில் இலங்கையை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
அரச சேவையாளர்களுக்கான சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. சமுர்தி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. 13 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. வெகு விரைவில் 100 விடயங்களை எம்மால் நிறைவேற்ற முடியுமாயிற்று.
இன்று ஊடகவியலாளர்கள் எவ்வித தடையுமின்றி தமது பேனையை பயன்படுத்த முடியும். இன்று நாலாம் மாடிக்கு கொண்டுச் செல்வதில்லை. இன்று அவ்வாறான சூழ்நிலை காணப்படவில்லை. புதிய கலாசாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச ரீதியாக இலங்கைக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. ஜனநாயகம், நல்லிணக்கம் என்பவற்றை பலப்படுத்த ஜனாதிபதி செயற்படும் அதேவேளை, பிரதமர், பொருளாதார மாற்றங்களை முன்னெடுக்கிறார்.
19ஆவது திருத்தச் சட்டத்தினால், நீதிமன்றம், பொலிஸ், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு என்பன சுயாதீனமாக இயங்குகின்றன. 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்ற தற்போதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேசத்தை மீண்டும் நாம் வெற்றிகொண்டுள்ளோம். நல்லிணக்கத்திறக்கு முதலிடம் கொடுத்து நாம் பணியாற்றுவோம். அனைத்து மக்களும் பயம், ஐயமின்றி வாழ முடியும். அதனால் நாம் அனைவரும் இணைந்து வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிப்போம்’ என்றும் கூறினார்.