சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – இலங்கை அரசு
அரசியலமைப்புத் திருத்தம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள சகல தரப்பினருக்கும் இடையில் உடன்பாடு காணப்படுகிறது. சமஷ்டி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.
அதேவேளை, 1972 அரசியலமைப்பு போன்று இந்த புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. அரசியலமைப்பு மாற்றம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பொதுசன வாக்கெடுப்பின் மூலமே இது நடைமுறைப்படுத்தப்படும்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாணசபை முறையை ஒழிக்கும் திட்டம் கிடையாது. அனைத்து கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் அடங்கலாக சகல தரப்பினரதும் கருத்துக்களை பெற்றே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.