முள்ளிவாய்க்கால் அவலத்தை சட்டலைட்டில் அவதானித்தவர்களுக்கு ஏன் மனித உரிமை தினம்
முள்ளிவாய்க்கால் அவலத்தினை சட்டலைட் மூலம் அவதானித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இந்த சர்வதேச மனித உரிமை தினம் என தமிழ் சிவில் சமூகத்தின் இணைச்செயலாளர் பி.என் சிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், கிளிநொச்சியில் யுத்த காலகட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளராக செயற்பட்டு 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கிளி பாதர் என அழைக்கப்பட்ட எம்.எக்ஸ்.கருனாரட்ணம் அடிகளாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து கருத்துரைகள் ஆற்றப்பட்டன. நிகழ்வில் விரிவுரையாளரகள், மத தலைவர்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மக்களுக்கான அழிவுகள் இடம்பெற்ற போது அமைதியாக இருந்தவர்கள் சர்வதேசத்தினர். யுத்தத்திற்கான அனைத்து உதவிகளையும் வழங்கியவர்களும் அவர்களே. முள்ளிவாய்க்கால் அவலத்தினை சட்டலைட் மூலம் அவதானித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இந்த சர்வதேச மனித உரிமை தினம் என கேள்வி எழுப்பினார்.
நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய சத்தியானந்தம் குறிப்பிடுகையில்,
இனப்படுகொலை குற்றம் நடக்கும்வரை எந்த நாடுகளிலும் ஐ.நா தலையிடாது எனும் கொள்கை காணப்படுகிறது. அவை அனைத்தும் வந்த பின்னர் காக்கும் திட்டங்களாகவே உள்ளது. உலகம் பார்த்து கொண்டிருக்கையில் இடம்பெற்ற இனபடுகொலைகள் தொடர்பில், தற்போது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.