வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் – ரெலோ அறிவிப்பு
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அறிவித்துள்ளது.
தமது கட்சியின் இந்த முடிவை ரேலோவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அறிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்படாது போனால், வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக ரெலோ இன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். எனினும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈபிஆர்எல்எவ்வின் இரண்டு உறுப்பினர்கள் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தநிலையிலேயே, நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ரெலோவும், இந்த முடிவை எடுத்துள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான இறதி வாக்கெடுப்பு வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.