வரவு செலவுத் திட்டம் - தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு
தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் வகையில் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து செயற்பட்டுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வரவு செலவுத் திட்ட விடயத்தில் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழரசு கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் உருவாகியுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஈபீஆர்எல்ஏப் இன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில், தற்போது ரொலோவும் வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனை அடிப்படையிலேயே ஆதரவுளிக்க முடியும் என கூறியுள்ளது.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ரொலோவின் பொதுக்குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகள் அனைவரும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் தமது கட்சியைச் சேரந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பிற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என ரொலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்துள்ளார்.
தமது இந்த தீர்மானம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும் தாமும் வரவு செலவுத் திட்டத்தை விமர்சித்ததாக சுட்டிக்காட்டியுள்ள இரா சம்பந்தன், அதற்காக அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாகவும் பக்குவமாகவும் நடப்பதற்கு தயாராக உள்ளது என்பதை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.