காணி,பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு அவசியம் - சபையில் செல்வம் எம்.பி.
அரசியலமைப்புச் சட்டத்தை 19 ஆவது தடவையாகவும் திருத்தி பாராளுமன்றத்தைப் பலப்படுத்தியது போன்று மாகாண சபைகளையும் பலப்படுத்த வேண்டும். அத்துடன் மாகாணசபைகளுக்கு உரித்தான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் வலியுறுத்தினார்.
அனைத்து மாகாண சபைகளிலும் முதலமைச்சர் நிவாரண நிதியம் இயங்கிவருகின்ற நிலையில் வடமாகாணத்திற்கு மாத்திரம் அது புறக்கணிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அரசாங்கம் புறக்கணித்து வந்த அதே செயற்பாட்டினை இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்றி வருவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இங்கு மேலும்
மாகாண சபைகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியம் என ஒன்று இருக்கின்றது. இந்நிதியத்துக்கு வங்கியூடாக வருகின்ற நிதியை அரசாங்கம் கண்காணிக்கின்றது. இந்நிதியானது நாட்டின் ஏனைய மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும் வட மாகாணத்தில் அவ்வாறான முதலமைச்சர் நிவாரண நிதியம் என்று ஒன்றில்லை.
மஹிந்த அரசாங்கத்தின்போது இந்நிதியம் வடக்கிற்கு புறக்கணிக்கப்பட்டது. அதேபோன்று புதிய அரசாங்கமும் இதே நிலையை பின்பற்றி வருவது வேடிக்கையாக இருக்கிறது.
மேலும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம் பாராளுமன்றம் பலப்பட்டிருப்பது போன்று மாகாண சபைகளையும் பலப்படுத்த வேண்டியுள்ளது. மாகாண சபைகளின் அமைச்சர்களினது அதிகாரங்களையும் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
மாகாணசபைகளுக்கு மத்திய அமைச்சினூடாக நிதி வழங்கப்பட்டு அந்நிதி திணைக்களங்களுக்கு வழங்கும் படி நிர்ணயிக்கப்படுகின்றது. எனினும் இந்நிதியை மாகாண சபைகள் உரியவாறு திணைக்களங்களுக்கு கிடைக்கச் செய்தல் வேண்டும்.
மேலும் மாகாண சபைகளுக்குரிய பொலிஸ் காணி அதிகாரங்கள் இதுவரையிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படாதிருக்கின்றது. பேச்சளவில் மாத்திரமே இவ்விபரங்கள் இருந்து வருகின்றன. ஆகவே இதனை மாற்றியமைத்து பொலிஸ் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம்பெறவிருப்பதாக தெரிய வருகிறது. எனினும் வடக்கு, கிழக்கில் இதற்கான எல்லை நிர்ணயமானது முடிவுற்றிருக்கவில்லை. எமது இனப்பரம்பலை கருத்திற்கொண்டு இங்கு எல்லை நிர்ணயம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதுடன் எல்லை நிர்ணயப்பணிகளின் போது அவசரமில்லாத நடவடிக்கைகளும் அவசியமாகும்.
எல்லை நிர்ணய நடவடிக்கைகளின் நிறைவின் பின்னரே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவது சிறப்பாக இருக்கும் என்றார்.