லசந்த, ரவிராஜ் கொலைக்கு யார் காரணம்? காட்டிக்கொடுத்தார் ரணில்
முன்னைய அரசாங்கம் விடுதலை செய்த 12,000 பேரில் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட புலிச் சந்தேக நபர்கள் இல்லையெனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 38 அரசியல் கைதிகளில் அவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள் இருக்கின்றனரா என்பதை தேடி அறியுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
''சரத் பொன்சேக்காவை சிறைவைத்தனர். லசந்த, ரவிராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். மகேஸ்வரன் கொல்லப்பட்டார். இவற்றுக்கு யார் காரணம்? மகிந்த ஜெனீவா சென்று அன்று இராணுவத்தைக் காட்டிக்கொடுத்தார். ஜெனீவாவில் வாக்குறுதியளித்தது யார்? 2005ஆம் ஆண்டு பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது யார்? புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? லக்ஸ்மன் கதிர்காமரைக் கொலை செய்யப்பட்ட பின்னர் கூட விடுதலைப் புலிகளுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இதுகுறித்து நீங்கள் விளக்கமளிக்க வேண்டும்.'' எனக் கூறினார்.
அன்று யுத்தத்தை வெற்றிகொள்ள அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற அனைத்து நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்தன. தகவல்களை வழங்கின. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.