Breaking News

அரசின் அசமந்த போக்கினாலேயே அரசியல் கைதிகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை

யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அரசியல் கைதிகளுக்கான ஒரு தீர்வு எட்டப்படாமை அரசின் அசமந்த போக்கா காரணம்? தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது ஏன் அரசிற்கு தெரியவில்லை என மன்னார் மாவட்ட போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து குறித்த அமைப்பு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியல் கைதிகள் பொது மன்னிப்பளிக்கப்பட்டு நிபந்தனை ஏதும் அற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்ட வரலாறு எமது அரசியல் வரலாற்றில் உண்டு. அவ்வாறான நிலையில், இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அரசின் அசமந்த போக்கையே எடுத்துக் காட்டுகிறது.

வடமாகாண கரையோரம் வாழ் மீனவர்கள், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல் நடவடிக்கையால் பல்வேறு பாதிப்புக்குள்ளாவதுடன், வருமான குறைவு ஏமாற்றம் போன்ற துயரங்களுக்கும் உள்ளாகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளால் வட- கிழக்கு மக்கள் உளவியல் ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே இவற்றுக்கான நிரந்தர தீர்வை விரைவில் அரசு ஏற்படுத்தி மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இக்கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.