Breaking News

முகாமில் பாதுகாப்பில்லை! கண்ணீர் விடும் ஈழ அகதிகள்

இந்திய அகதி முகாம்களில் போதியளவு பாதுகாப்பு இல்லையென தமிழகத்தின் மதுரை – ஆனையூர் பகுதியில் காணப்படும் அகதி முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

முகாமுக்குள் திடீரென நுழையும் ரவுடிகள் அங்குள்ள இளைஞர்களை தாக்கி கொடுமைப்படுத்துவதாகவும், சண்டையிட்டு வருவதாகவும் தெரிவித்த அகதிகள் குடிப்பதற்கு சுத்தமான நீர்கூட இல்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இவர்கள், மதுரை ஆட்சியரிடம் மகஜரொன்றை கையளித்துள்ளதோடு பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடந்த கொடூர யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி தமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கை மக்கள் தற்போது கட்டம் கட்டமாக நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். எனினும் இன்னும் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள நிலையில், அவர்களை மீள அழைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.