ஐ.எஸ்.இன் நடவடிக்கை இலங்கையை பாதிக்கும் - சபையில் பிரதமர் தெரிவிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலைதூக்கும். இதன் போது இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வரவு- – செலவுத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் எதிர்க்கட்சிகள் யோசனைகளையும் திருத்தங்களையும் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 8 ஆம் நாள் விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமெரிக்காவைத் தவிர்ந்த உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கி வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலை தூக்கும்.
இதனால் எமது நாட்டிலும் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்துடன் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிதியமைச்சர் தயாராகவுள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்தின் குறைபாடுகளை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் அதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும். என்னென்ன திருத்தங்கள் தேவை?, எதிர்க்கட்சிகளின் புதிய யோசனைகள் என்ன? என்பவை முன்வைக்கப்பட வேண்டும்.
இதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். எதிர்கட்சிகளுடன் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்பதும் முழுப் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றுவதே எமது திட்டமாகும்.
நாமனைவரும் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். அதே போன்று பழைய அரசியல் சம்பிரதாயங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்காது, புதிய அரசியல் சம்பிரதாயத்தை உருவாக்கி புதியதொரு அரசியல் பயணத்தை ஆரம்பிப்போம்.
ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்ட செலவுத் தொகைகளுக்கு அமையவே அனைத்து செலவுகளும் முன்னெடுக்கப்படும். வரவு – செலவுத் திட்டம் என்பது சட்டத்தை நிறைவேற்றுவதாகும். ஆனால் செலவுகள் அனைத்தம் ஒதுக்கீட்டு சட்ட மூலத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படும். எனவே அரசு கல்விக்காகவும் சுகாதாரத்திற்காகவும் ஒதுக்கியுள்ள நிதி தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிடும் தரவுகள் தகவல்களில் உண்மைத் தன்மை கிடையாது.
ஜனாதிபதி மற்றும் நான் இச்சபையில் எமது பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்தோம். இதன் பின்னர் நிதியமைச்சர் இணக்கப்பாட்டு அரசின் முதலாவது வரவு- – செலவுத் திட்டத்தை இச்சபையில் முன்வைத்தார். குடும்ப ஆட்சி, ஊழல், மோசடி, ஜனநாயகத்தை அடக்குமுறைக்குள்ளாக்கி, ஒழுக்கமற்ற சமூகத்தை கட்டியெழுப்பி சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்த பயணத்தை மாற்றியமைக்கும் தேவை பெரும்பாலானோருக்கு ஏற்பட்டது.
இப்போராட்டத்திற்கு நாம் முன்னுரிமை வழங்கி ஜனவரி 8 ஆம் திகதியும் ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி இணக்கப்பாட்டு ஆட்சியை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் இன்று புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது கடினமானது. சம்பிரதாயபூர்வமான அரசியலுக்குள் சிக்கிக் கொண்டிருப்போருக்கு இப் புதிய பயணத்திற்கு முகம் கொடுப்பது கடினமான காரியமாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முழு நாட்டையும் விற்றுத்தீர்க்கும் வரவு – செலவுத் திட்டம் என பல்வேறு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு விமர்சிப்பவர்களை நாம் பகைவர்களாக நோக்கவில்லை. அவர்கள் நாடு தொடர்பில் அல்ல தத்தமது கட்சிகளின் இருப்பு தொடர்பில் கவனம் செலுத்தியே விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இறுதிமுடிவு எடுக்கவில்லை
ஊழியர் சேம நல நிதியம், நம்பிக்கை நிதியம் இணைப்பு தொடர்பாக இதுவரையில் எதுவிதமான இறுதி முடிவும் எடுக்கபட வில்லை. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தபட்டன. இறுதித் தீர்மானம் அவர்களுக்கு அறிவிக்கப்படும்.
இறுதி முடிவு அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற செயற்குழுவின் அனுமதிக்கமையவே எடுக்கப்படும். எனவே இவ்விடயத்தில் அனைத்தும் வெ ளிப்படைத் தன்மையாகவே முன்னெடுக்கப்படும். இதன் மூலம் கடந்த ஆட்சியில் ராஜபக் ஷ காலத்தில் இடம்பெற்ற திருட்டுக்களையும் ஊழல்களையும் நிறுத்துவதே எமது நோக்கமாகும்.
இவ்விடயம் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டு மூலம் முன்னெடுக்கப்படும். பழமையான அரசியல் சம்பிரதாயங்களில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு இதனை புரிந்து கொள்ள முடியாதுள்ளது. இதிலிருந்து மீண்டும் திறந்த மனதுடன் இதனை பார்க்க வேண்டும்.
புதிய பயணத்தை முன்னெடுப்போம்
ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பேதங்கள் இல்லாமல் நாட்டின் அபிவிருத்திக்காவும் முன்னேற்றத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் புதிய பயணத்தை முன்னெடுக்க இச் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.
முழுப் பாராளுமன்றத்தையுமே அரசாங்கமாக செயற்படுத்துவதற்கு கண்காணிப்பு குழுவொன்றை அமைப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போதுள்ள பொது வர்த்தக அரச கணக்காய்வு மற்றும் பொது முறைப்பாட்டு செயற்குழுவுக்கு மேலதிகமான அரச நிதி மற்றும் மேலும் 16 விடயங்களின் கீழ் கண்காணிப்பு செயற்குழுவொன்று ஏற்படுத்தப்படும்.
இதன் தலைமைத்துவம் எம்.பி.க்களுக்கே வழங்கப்படும். அனைத்து அமைச்சுகளும் இந்த கண்காணிப்புச் சபைக்கு கீழ்கொண்டு வரப்படும். இதற்கமைய அரச நிர்வாகத்திற்குள் இந்த பாராளுமன்றம் இணைக்கப்படும்.
தேசிய கண்காய்வு சட்ட மூலம் தகவல் அறியும் சட்டமூலம் அனைத்தும் விரைவில் முன்வைக்கப்படவுள்ளதோடு உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதம் அதிகரிப்பதற்கான திருத்தங்களும் முன்வைக்கப்படவுள்ளது.
அபிவிருத்திகளை கண்காணிப்பதற்காக இணைப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.கடந்த காலங்களில் ஊடகங்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் போனார்கள். இதனால் பலர் வெளிநாடுகளுக்கு சென்றனர். சிலர் அமைதியானார்கள். சிலர் அடங்கிப் போனார்கள்.
ஆனால் இன்று முழு சமூகமும் அச்சமின்றி வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடத்தல்கள் இல்லை. வெள்ளை வான் இல்லை. அழுத்தங்கள் கிடையாது.
அடங்கிப் போன ஊடகவியலாளர்கள் இன்றும் தமது பணியை “அடக்கியே” முன்னெடுக்கின்றனர். நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தோர் அரசியலமைப்பை முழுமையாக வாசிக்காதவர்கள். ஏனென்றால் வரவு –செலவுத் திட்டம் தோற்றால் அரசு வீழ்ந்துவிடும். உரமானியத்துக்கும், மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர் வழங்கப்படுவது அதனை இல்லாதொழிற்பதற்காக அல்ல.
2016 ஆம் ஆண்டளவில் வரிகள் பொருளாதாரத்தில் ஸ்திரமின்மையை உருவாகும். அமெரிக்காவை விடுத்து ஏனைய நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி வேகம் குறைந்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையையும் பாதித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் ஸ்திரமில்லா நிலையேற்பட்டால் அது இலங்கையை பாதிக்கும்.இதனை கருத்தில் கொண்டு அவசரத்தின் போது முகம் கொடுப்பதற்கான முன்னேற்பாடாக சர்வதேச நாணய நிதியத்துடன் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது.
எனவே அரசியல் நோக்கங்களை முதன்மைப் படுத்தி செயல்படுவதா? இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கிச் செல்வதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற வுள்ளது. இதன்போது நாமனைவரும் கட்சிகளுக் காக அர்ப்பணிப்பு செய்தவர்களாக மக்களிடம் செல்லாது, நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்பு செய்த
கட்சிகளின் உறுப்பினர்களாக மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். இந்த உயரிய கொள்கைகள் ஒன்றுபடுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.