மகேஸ்வரனின் படுகொலை சூத்திரதாரியை கைதுசெய்யுங்கள் - சபையில் விஜயகலா வலியுறுத்தல்
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்த முன்னாள் அமைச்சர் அமரர் மகேஸ்வரனின் படுகொலை சூத்திரதாரி இன்று இப்பாராளுமன்றத்திலேயே இருக்கிறார். இவரை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலப்பிரப்பில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்த மாளிகையை இடித்து உடைத்து அந்நிலப்பகுதியை நில உரிமையாளர்களுக்கு கையளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இங்கு மேலும் உரையாற்றுகையில்
வடக்கு மக்களின் காணிகள் இன்னும் இராணுவத்தின் பிடியில் இருந்து வருகின்றன. எமது மக்கள் தமது நிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இன்னும் இருந்து வருகின்றனர்.
வலி வடக்குப் பிரதேசத்தில் முன்னைய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட 6300 ஏக்கர் காணியிலிருந்து நாம் 1000 ஏக்கர் காணிகளை இராணுத்திடமிருந்து மீட்டு மக்களிடம் கையளித்துள்ளோம். இன்னும் 5300 ஏக்கர் காணி இராணுவத்தின் வசமே உள்ளது. இந்தக் காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.
மயிலிட்டி கே.கே.எஸ் மற்றும் பலாலி ஆகிய பிரதேசங்கள் இன்னும் பாதுகாப்பு வலயங்களாக இருந்து வருகின்றன. பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அங்குள்ள பள்ளவாசல் மற்றும் ஆலயங்கள் இயங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றன.
மக்களுக்கு சொந்தமான காணிகளில் விடுதிகள், ஹோட்டல்கள் இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை மரக்கறிச் செய்கையையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமாத்திரமின்றி அலரி மாளிகைக்கு இணையாக மஹிந்த மாளிகை ஒன்றும் 250 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் காணியானது மக்களுக்கு சொந்தமானதாகும். எனவே மேற்படி மஹிந்த மாளிகையை இடித்து உடைத்து விட்டு அக்காணியை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கில் இன்று 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 90000 இளம் விதவைத் தாய்மார் இருக்கின்றனர். 30 ஆயிரம் பேர் ஊணமுற்றிருக்கின்றனர். அதேபோல் 7000 சிறுவர்கள் தாய் தந்தையரை இழந்துள்ளனர். இவ் அனைத்து பலிவாங்கல்களையும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பமே ஏற்க வேண்டும்.
12000 போராளிகளை விடுவித்தவர்கள் இன்று 217 பேரை விடுவிக்கும் விடயத்தில் இனவாதத்தை பேசிக் கொண்டிருக்கின்றனர். எதிர்கட்சியினரின் விவாதத்துக்காக எமது மக்களை பணயம் வைக்க வேண்டாம் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் முன்னைய அரசாங்கத்தின் போதே ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன், லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டனர். மகேஸ்வரன் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காகவே அவரது மெய்ப்பாதுகாவலர்கள் விலக்கப்பட்டனர். மகேஸ்வரனின் பாதுகாப்பை விலக்கியமைக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தொடர்புள்ளது. அத்துடன் அவருக்கும் பிரபாகரனுக்கும் இருந்த தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று மகேஸ்வரனின் படுகொலை சூத்திரதாரி இந்த பாராளுமன்றத்திலேயே இருக்கிறார். அவரையும் விசாரணைகள்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.