ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டோரின் விடுதலை – இன்று முக்கிய தீர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறதா என்பது தொடர்பான இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, இன்றுடன் ஓய்வுபெறவுள்ளார்.. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைகளை மேற்கொண்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு, இந்த வழக்கில் தீர்ப்பை இன்று அறிவிக்கும் என்று தெரியவருகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும், தமிழ் நாடு அரசாங்கம் விடுவிக்க எடுத்த முடிவுக்கு எதிராக மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் கலிபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சபேர், யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது.
11 நாட்கள் நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், கடந்த ஓகஸ்ட் 12ஆம் நாள் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக அமைந்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரும், விடுதலையாகும் வாய்ப்புக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.