அதியுச்ச அதிகாரப்பகிர்வு - கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம்
புதிய அரசியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள், நலன்களை அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அடுத்த வருடம் முன்னெடுக்கப்படவுள்ளன.இந்நிலையில் தமிழ்,முஸ்லிம் தேசிய சமூகங்களின் பிரதிநிதித்துவங்கள், இருப்புக்கள், பூரண பாதுகாப்பு மற்றும் நீடித்த – நிலையான அரசியல் தீர்வு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று நடைபெற்றது.
கொழும்பு –07இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற மேற்படி சந்திப்பிலேயே மேற்கண்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. அத்துடன் நேற்றைய தினம் முதற்கட்டமாக இச்சந்திப்பு
இடம்பெற்றிருந்ததோடு தொடாந்தும் சந்திபுக்களை மேற்கொண்டு விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபை மேயருமான நிஸாம் காரியப்பர், கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாறுக் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேசரிக்கு தெரிவிக்கையில்,
அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உட்பட பல விடயங்களைக் கருத்தில்கொண்டு புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனங்களாகவும் ஒருமொழிபேசும் சமூங்களாகவும் தமிழ் முஸ்லிம் சமுகங்கள் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பில் தமிழ் முஸ்லிம் சமுகங்களுக்கான அபிலாஷைகள், அரசியல் தீர்வு, உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவே நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கலந்துரையாடயிருந்தோம்.
குறிப்பாக இச்சந்திப்பு அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான முதற்கட்டமாகவே அமைந்தது. எதிர்காலத்தில் நாம் தொடர்ந்தும் அவர்களுடன் பேசவுள்ளோம். அதனடிப்படையில் உத்தேச அரசியல் அமைப்பு வரைபில் எமது சமுகங்களுக்கான அபிலாஷைகள், உரிமைகள், நலன்கள் தொடர்பான விடயங்களை முன்வைப்பது குறித்து ஆராய்ந்து இறுதிசெய்யவுள்ளோம் என்றார்.
அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளரும் கல்முனை மாநாகர மேயருமான நிஸாம் காரியப்பர் சந்திப்பு குறித்து தெரிவிக்கையில்,
அரசியல் அமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அதியுச்ச அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாக உரிமைகளை, அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணைந்து செயற்படும். இதுதொடர்பில் தேசிய கட்சிகளுடனும் பேச்சுக்களை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பு(நேற்று) அதன் ஆரம்பமாகவே உள்ளது. எதிர்காலத்தில் விரிவான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் கல்முனை உட்பட மற்றும் சில பகுதிகளில் தமிழ் முஸ்லிம் எல்லைக்கிராமங்களில் நிலவிவருகின்ற பிரச்சினைக்களுக்கு நிரந்தர தீர்வை எட்டும் முகமாக உள்ளுர் மட்டத்தலைமைகள் மத்தியில் சுமுகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதெனவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாகமாற்றும் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையாற்றவுள்ளார்.