Breaking News

சென்னை புறநகர் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு: முடங்கியது போக்குவரத்து

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

தற்போது பெய்துவரும் கனமழையை அடுத்து பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாகம் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரித்ததை அடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொசஸ்தலை ஆற்றுப் பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரியில் இருந்து வினாடிக்கு 20,000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அதனைச் சுற்றியுள்ள கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புழல் ஏரியில் 2790 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படுவது அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தட்ரைபட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

மழை தொடர்ந்து பெய்துவருவதால் ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.