அதிரடி கைதுகள் விரைவில் அரசாங்கம் அறிவிப்பு
கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள், மற்றும் ஊழலில் ஈடுபட்ட ராஜபக் ஷ குடும்பம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
எனவே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளோரை விரைவில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் கைதுகள் படலம் விரைவில் ஆரம்பிக்கும். குற்றம் செய்தவர்கள் சிறை செல்லும் காலம் வந்துவிட்டது என்று அமைச் சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ள கைதுகளை தடுக் கும் நோக்கில் அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்து வதற்காக கடந்த ராஜபக்ஷ ஆட்சியின் ஆவிகளும் நிழல் களும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு நல்லாட்சிக்கு எதிராக செயற்படுகின்றவர்கள் தொடர்பில் நல்லாட்சிக்கு அப்பால் சென்று பாடம் புகட்டுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சியைக் குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். எமது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நல்லாட்சி தொடரும். நல்லாட்சியை குழப்புவோருக்கு எடுக்க நடவடிக்கைகள் எம்மிடம் உள்ளன என்றும் ராஜிதசேனாரட்ண சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் ஜனவரிமாதம் 8ஆம் திகதியுடன் நாட்டில் மாற்றத்திற்கான புரட்சி ஏற்பட்டு ஒருவருடம் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடகாலத்தில் நாம் பல்வே சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். விசேடமாக 1978 ஆம் ஆண்டிலிருந்து முயற்சிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்கும் 19 ஆவது திருத்த சட்டத்தை நாம் நிறைவேற்றினோம்.
இதில் இரண்டு முக்கிய அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டன. ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற அதிகாரமும் அவர் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற அதிகாரமும் ஒழிக்கப்பட்டன. இதன் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் மாறியுள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக யாரும் நீதிமன்றம் செல்லும் உரிமை உள்ளது.
அதுமட்டுமன்றி விரைவில் முழுமையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பதற்கு ஜனாதிபதி திடசங்கற்பம் பூண்டுள்ளார். அதன் மூலம் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதனூடாக ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பிரதமர் முறைமை உருவாக்கப்படும்.
இதனை நாங்கள் செய்தே தீருவோம். பிரதமர் ஆட்சி முறைமையை நிறுவிவிட்டே 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கு நாங்கள் செல்வோம். அடுத்ததாக 18 ஆவது திருத்த சட்டத்தை நீக்கிய எமது அரசாங்கம் 19 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக அரசியலமைப்புப் பேரவையும் நிறுவி சுயாதீன ஆணைக்குழுக்களையும் நிறுவியது.
தற்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் சிறப்பாக செயற்படுகின்றன. அதுமட்டுமன்றி நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நல்லாட்சி ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை என்பவற்றை நிலைநாட்டினோம். ஊடகவியலாளர்கள் தற்போது எதற்கும் பயப்படவேண்டியதில்லை. தற்போது ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதில்லை.அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில்லை. அந்தளவிற்கு ஊடக சுதந்திரத்தை நிறுவியிருக்கின்றோம். ஆனால் சில ஊடகவியலாளர்கள் அந்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
குறிப்பாக கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆவிகளும், நிழல்களும் நல்லிணக்கத்தைக் குழப்புவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள், மற்றும் ஊழலில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
எனவே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளோரை விரைவில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் கைதுகள் படலம் விரைவில் ஆரம்பிக்கும் என்பதை தெரிவிக்கின்றோம். விசேடமாக தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தற்போது நன்றாக தெரிந்துவிட்டது.
ஆகவே விரைவில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சுவிஸ் வங்கியில் இலங்கையில் இருந்து கறுப்புப் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தரவுகளை எமக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த வங்கி முன்வந்துள்ளது. அத்துடன் சிங்கப்பூர், டுபாய் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் தொடர்பாகவும் தரவுகள் வர ஆரம்பித்துள்ன. எனவே இவை அனைத்தையும் கொண்டு விசாரணைகளை நடத்தவுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம்.
இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ள கைதுகளை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஆவிகளும் நிழ்களும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு நல்லாட்சிக்கு எதிராக செயற்படுகின்றவர்கள் தொடர்பில் நல்லாட்சிக்கு அப்பால் சென்று பாடம் புகட்டுவதற்கு அரசாங்கம் தயாரக உள்ளது.
எமது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நல்லாட்சி தொடரும். நல்லாட்சியை குழப்புவோருக்கு எடுக்க நடவடிக்கைகள் எம்மிடம் உள்ளன. நல்லாட்சியை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. நல்லாட்சியை குழப்புகின்றவர்களுக்கு நல்லாட்சி என்ன என்பதை காட்டுவதற்கு நாம் தயாராக உள்ளோம். நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூடி கலந்துரையாடினர்.
இதன் போது ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் இனவாதிகளை தோற்கடிக்கப்பதற்கும் திடசங்கற்பம் பூணப்பட்டது. நல்லாட்சிக்கு எதிரான சக்திகள் எவ்வாறு செயற்பாட்டாலும் நாம் தோற்கடிப்போம். தற்போது சிலர் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் எமது நல்லாட்சிப் பயணம் தொடர்ந்து பயணிக்கும். அதனை தடுத்து நிறுத்த எவராலும் முடியாது.
கேள்வி:- ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் இடம் பெறவில்லையே
பதில்:- இந்த செயற்பாட்டில் காணப்படுகின்ற தாமதம் குறித்து மக்கள் அக்கறை செலுத்தியுள்ளனர். இதில் சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் பொலிஸ் திணைக்கள் என்பன சம்பந்தப்பட்டுள்ளன. சில இடங்களில் மந்தகதியை காண்கிறோம். வழக்கு விசாரணைகள் இடம் பெற்று முடிந்துள்ளன. தற்போது நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டியுள்ளது. ஆனால் இவ்வாறு கைதுகள் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள கடந்த ஆட்சிகாலத்தில் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தை குழப்புவதற்கும் வீண் பிரச்சினைகள் ஏற்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் மற்றும் கைது சம்பந்தமான விவகாரங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்டோம் மேற்கொண்டுள்ள இறுதி முயற்சியையும் நாங்கள் தோற்கடிப்போம்.
கேள்வி:- எவன்காட் விவகாரம் தொடர்பில் ?
பதில்:- அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விடயத்தில் ஒரு தாமதம் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
கேள்வி:- எவன்காட் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை தொடர்ந்து புறக்கணிக்கிறாரே?
பதில்:- அந்த விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதியும் செல்கிறார். ஆனால் எவன் காட் நிறுவனத் தலைவர் அதனை தவிர்க்கிறார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- யாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று கூற முடியுமா?
பதில்:- பலர் உள்ளனர். ராஜபக்ஷ குடும்பம் உள்ளிட்ட பலருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பலர் சிறைகளுக்குள் செல்வதற்கான காலம் வந்துவிட்டது. தவறு செய்தோர் தப்பிக்கவே முடியாது.