தமிழ் மக்கள் பேரவையின் உதயம் நியாயமானதே: சிறீதரன்
தமது இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற மக்கள், தமது தேசிய இலக்கை அடைவதற்காக தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை உருவாக்குவதில் நியாயமிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘கடந்த கால அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வந்த தமிழ் மக்களின் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டும், பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு கிடைக்காமையினால் மக்கள் அதிருப்பதியில் இருக்கின்றனர்.
வடக்கு – கிழக்கு இணைந்த தீர்வு கிடைக்குமா, இலங்கை அரசு ஒற்றையாட்சி என்ற முறைமையில் இருந்து வெளியில் வந்து சமஷ்டி முறையில் தீர்வினை பெற்றுக் கொடுக்குமா என்ற சந்தேகங்கள் மக்களிடம் இருக்கின்றன.
இவை உட்பட காணி, பொலிஸ், நிதி உள்ளிட்ட மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பிலும் மக்கள் மத்தியில் சந்தேகம் உருவாகிவரும் நிலையில், இவ்வாறான அமைப்புக்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதனை நாம் வரலாற்றில் இருந்து உணர்ந்து கொள்ள முடியும். எனவே இதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது’ என்று கூறினார்.