அடைக்கலநாதனுக்கு நாவடக்கம் வேண்டும்! – வவுனியா பிரஜைகள் குழு கண்டனம்
எதிரிகள், துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டதே
‘தமிழ் மக்கள் பேரவை’ என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள். தங்களின் இந்தப்பேச்சு, சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் – குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரதிநிதியாக சிவில் சமுக மனித உரிமைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினராகிய எமக்கு அதிர்ச்சியையும், விரக்தியையும் அளித்துள்ளது.
‘தமிழ் மக்கள் பேரவை’ என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள். தங்களின் இந்தப்பேச்சு, சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் – குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரதிநிதியாக சிவில் சமுக மனித உரிமைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினராகிய எமக்கு அதிர்ச்சியையும், விரக்தியையும் அளித்துள்ளது.
ஒரு போராளியாக உருவாகி பின்னர் அந்த இயக்கத்தின் தலைவராக பரிணமித்து, இப்பொழுது வீரம் செறிந்த வன்னி மண்ணின் தமிழ் மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று, அரசாங்கத்தின் ஆசியுடன் குழுக்களின் பிரதித்தலைவராகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளீர்கள்.
மக்களின் பிரச்சினைகளை தேர்தல் அரசியலுக்கு அப்பால் முன்னெடுத்து, ஒருமித்த குரலில் மக்கள் பிரதிநிதிகளின் ஊடாக அரசாங்கத்திடம் கொண்டு சேர்ப்பதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமாகும். இந்த உயரிய நோக்கத்தை சிறுமைப்படுத்தும் விதத்தில் நீங்கள் கூறியிருக்கும் கருத்து உங்கள்மீது தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு முன்னர் தமிழ் மக்களை நீங்கள் புரிந்துகொண்டுள்ளதன் அடிப்படையில் உங்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
‘2013ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வின்றேல் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றீர்கள். அதனைத் தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம் என்றீர்கள். வரவு-செலவுத்திட்டத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டாமல் அரசியல் கைதிகளின் விடுதலையுடன் தொடர்புபடுத்தி உங்கள் அரசியல் – பொருளாதார அறிவை வெளிப்படுத்தினீர்கள்.
தமிழ் மக்கள் பேரவை உதயத்திற்கான ஏற்பாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உங்களை அழைத்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்த நீங்கள் வருவதாக உறுதி அளித்து ஏற்பாட்டாளர்களை மணிக்கணக்கில் காக்கவைத்து பின்னர் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிஒளிந்தீர்கள். இதன் காரணமாகவே உங்களை ஏற்பாட்டாளர்கள் அழைக்காமல் விட்டிருக்கலாம். அவர்கள் அழைத்திருந்தாலும் நீங்கள் இதயசுத்தியுடன் கலந்துகொண்டிருக்க மாட்டீர்கள்.
இதேபோன்றதொரு நிகழ்வு இதற்கு முன்னரும் நடைபெற்றதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2010ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் ஜனநாயக விரோதப்போக்கைச் சுட்டிக்காட்டுவதற்காக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருவதாக உறுதியளித்து பின்னர் ஆனையிறவு தாண்டியவுடன் வந்த தொலைபேசி அழைப்பிற்கேற்ப வாகனத்தைத் திருப்பி வவுனியா சென்றீர்கள்.
சர்வதேச விசாரணையே வேண்டும் என்று வலியுறுத்தி கட்சியின் தலைவராக இலங்கையில் கையொப்பம் வைத்துவிட்டு, பின்னர் நாற்பது அமைப்புகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு ஐ.நா. மனிதவுரிமை பேரவையிடம் கையளித்த பின்னர் என்ன காரணத்திற்காகவோ எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றீர்கள்.
உங்களது கடந்தகால செயற்பாடுகளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு குறிப்பிடுகிறோம்.
இத்தகைய வரலாற்றைக் கொண்ட நீங்கள், தமிழ் மக்கள் பேரவையைப் பார்த்து வசைபாடியிருப்பது உங்களது அரசியல் அறிவீனத்தையே காட்டுகிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தேர்தல் அரசியலுக்கு அப்பால் முன்னெடுத்துச் செல்வதற்கான வெகுஜன அமைப்பு வேண்டும் என்று கூட்டமைப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவளித்த நீங்கள், இப்பொழுது அதற்கான கட்டமைப்பு செயல்வடிவம் பெற்றவுடன் எதிர்ப்பது ஏன்?
ஒரு போராளியாகவும் போராட்ட இயக்கத்தின் தலைவராகவும் அதன் பயனாக மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கும் நீங்கள் விடுத்திருக்கும் செய்தியை வவுனியா பிரஜைகள் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதுவரை காலமும் உங்களுக்கு ஆதரவளித்தமைக்காக மிகவும் வருத்தமடைகிறது. உங்களது விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
இதுவரை காலமும் தமிழ் மக்களின் பிரச்சினைகள்மீது அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக போராடிய நாங்கள் முதன்முறையாக தமிழினத்திற்காக போராடிய ஒரு அமைப்பின் தலைவருக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிட்டீர்கள்.
மக்கள் நலப்பணியில்…
கி.தேவராசா,
தலைவர்
தி.நவராஜ்,
செயலாளர்
தொடர்புடைய செய்தி -