கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடன் கூட்டுக - ரெலோ சம்பந்தனிடம் கோரிக்கை
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிலைமையை ஆராய்வதற்கென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை கூட்டுமாறு அதன் தலைமைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001 இல் ஆரம்பிக்கபட்டதிலிருந்து நிகழ்ந்த அத்தனை நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்று வந்திருக்கின்றது.இந்த நாட்டில் அரசியல் நீதி கோரி வந்திருக்கும் எமது மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்குகின்றது.
எமது மக்கள் சம்பந்தப்பட்ட சகல பிரச்சினைகள் தொடர்பிலும் குறிப்பாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வென்றெடுப்பதற்கான குறிக்கோள் தொடர்பிலும், எமது இனத்தின் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் எமது கட்சி உறுதியாகவுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதிலும், அதனை மேலும் பலப்படுத்தி, வலுப்படுத்துவதிலும் நாம் தீவிர அக்கறையும், ஈடுபாடும் கொண்டுள்ளோம்.
சமீபத்தில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மக்கள் பேரவை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையை ஆரய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுமாறு அதன் தலைவரான சம்பந்தனிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
அவரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார் இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் கலந்துகொண்டு விவாதித்து உகந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.