வடக்கில் 29 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இல்லை!
வடமாகாணத்திற்குட்பட்ட 104 வைத்தியசாலைகளில் 29 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருகின்றன. அத்தோடு குறித்த இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதனால் 2016ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும்போதே இதனைத்தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் 104 வைத்தியசாலைகளில் 29 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி தற்போதும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்விடங்களில் மக்களின் அடிப்படைத்தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
இவற்றில் அநேகமான இடங்களில் மீள்குடியேற்றம் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் இவ் இடங்களில் மக்களின் இக்குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கும் வைத்திய அதிகாரிகள் நிரந்தரமாக நியமிக்கப்படுவதற்கும் மத்திய அரசினால் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கை வைத்திய நிர்வாக தரத்திலுள்ளோர்களுக்கும் பாரிய வெற்றிடம் காணப்படுகின்றது. அந்தவகையில் 23 அனுமதிக்கப்பட்ட ஆளணியில் ஐந்து அதிகாரிகளே நிரந்தரமாக சேவையாற்றுகின்றனர். எனவே, சுகாதாரத் துறையின் வினைத்திறனான பங்களிப்பிற்கு உடனடியாக இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசாங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும். வடமாகாணத்திலுள்ள பெரிய வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் வினைத்திறனான விசேட வைத்திய சேவைகளைப்பெற்றுக்கொள்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் துணைமருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோரை நியமிப்பதற்கும் பொருத்தமான வைத்திய உபகரண வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போருக்குப்பின் மீண்டெழும் மாவட்டங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் அடிப்படை வசதிகளேயற்ற கிராமப்புற வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய தேவையுள்ளது.
வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் மருத்துவ கழிவுகளை சீராக முகாமைத்துவம் செய்வதற்காக மீள்குடியேற்ற அமைச்சினால் ஐந்து மாவட்டங்களிற்கும் தலா ஒவ்வொரு மருத்துவக்கழிவு எரிஉலைகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பிரதேச வைத்தியசாலையாகவுள்ள மல்லாவி , புதுக்குடியிருப்பு மற்றும் முருங்கன் வைத்தியசாலைகள் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களினூடாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியவர்களை பொதுநிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 25/2014(1) இன்படி தொடர்ச்சியாக 180 நாட்கள் கடமைபுரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவிப்பதோடு மேலும் எமது மாகாணத்தில் 789 சுகாதாரத் தொண்டர்கள் எதுவித கொடுப்பனவுமின்றி பல இன்னல்களுக்கு மத்தியில் 10,15 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றுகின்றார்கள். இவர்கள் மருத்துவ மாது வெற்றிடமாகவுள்ள பிரதேசங்களில் மிக இக்கட்டான நிலைமைகளில் விசேடமாக நோய்த்தடுப்பு பிரிவில் சேவையாற்றியவர்கள்.
எனவே இவர்களையும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் இவர்களுக்கான ஆளணி அனுமதியினை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திலிருந்து பெறப்படுவதற்கு ஆவன செய்ய முயற்சிகள் எடுக்கப்படும். விபத்துக்களின் போதும், அவசர மருத்துவ நிலைகளின் போதும் நோயா-ளர்களை வைத்தியசாலைகளிற்கு இட-மாற்று-வ-தற்கான அவசர அம்புலன்ஸ் சேவை-யொன்று ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க--ப்படும். அத்துடன் மாகாண சுதேச மருத்துவ திணைக்களம்
75 ஏக்கர் நிலத்தில் மூலிகைத் தோட்டமும் சித்த மருத்துவத்துக்கு தேவையான மருந்து உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையும் சுதேச வைத்தியத்திற்கான சுற்றுலா வசதிகளும் பரம்பரை வைத்தியர்களின் விஞ்ஞான ரீதியான அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைக்கான சுதேச வைத்திய பாட-சாலை ஒன்று நிறுவ நடவடிக்கை எடுக்-கப்படும் என்றார்.