ரவிராஜ் கொலை தொடர்பான சந்தேகநபர் அவுஸ்திரேலியாவில்!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேகநபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாபியன் ரோய்ஸ்டன் டௌசியன்கூ என்ற சந்தேகநபரே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதாகவும் அவரைக் கைதுசெய்து கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறும் ஸ்ரீலங்கா பொலிஸார் அவுஸ்திரேலிய பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்
சந்தேகநபர் பணியாற்றும் தனியார் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த மாலினி வென்டுரா என்பவருக்குச் சொந்தமானது என்றும் 2014ஆம் ஆண்டு அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் ஸ்தாபிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை அங்கு பணியாற்றிய கொலைச் சந்தேகநபர் தற்போது தமது நிறுவனத்தில் பணியாற்றுவதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை பணியில் இருந்து விலக்கியதாகவும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
நடராஜா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி கொழும்பு எல்விற்றிக்கல மாவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த படுகொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.