Breaking News

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம்: இராஜதந்திரிகள் அவதானிப்பு

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து அவதானித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக வழிமுறைகளில் உரிமைகளை பெறுவதற்கான மக்கள் செயற்பாடுகளை அமெரிக்கா வரவேற்கும். ஆனாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயலாற்றுவது அவசியம் என அமொிக்கா எதிர்ப்பார்ப்பதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசிதிகள் முழுமையாக செய்யப்பட வேண்டும். ஆனாலும் நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் எனினும் அரசியல் தீர்வுக்கான வேலைத் திட்டங்களில் அனைத்து தரப்பினரும் உரிய முறையில் ஈடுபட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் கூறியதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளின் கொழும்பில் உள்ள தூதுவர்கள் விரைவில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.