தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளையும் தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்துத் கொள்ள தீர்மானம்
ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேரவை நியமித்த நிபுணர்குழுவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
(முழுமையான காணொளி விரைவில் இணைக்கப்படும்)
வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் அவர்கள் அனைத்து கட்சிகளின் யோசணைகளையும் பெற்று செயற்படவில்லையானால் தமிழ் மக்கள் பேரவையை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சம்பந்தனிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் ஆதரவு வழங்குவது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடவுள்ளதாக புளொட், ரெலோ இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேரவையில் முக்கிய பதவி வகிக்கின்றமையினால் அந்த இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பேரவையின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை வடமாகாண சபை உறுப்பினா்கள் பலரும் பேரவைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இதன் காரணமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்தில் மறுசீரமைக்கப்பட்டு உரிய முறையில் செயற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் பேரவை அதற்கான அழுத்தக்குழுவாக இயங்கும் என்றும் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
தொடர்புடைய முன்னைய செய்திகள்