கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டால் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் - சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக எந்த அமைப்பு உருவானாலும் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையில் வடமாகாண முதலமைச்சர் இணைத்தலைமையாக செயற்படுவது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருமித்த தீர்வுத் திட்டத்தை கூறி அதற்கான மக்கள் ஆணையை தொடர்சியாக பெற்று வந்துள்ளன.
இதற்கு கடந்த கால தேர்தல்கள் சான்றாகும். இவ்வாறான நிலமையில் அதற்கு மாறாக சற்று வித்தியாசமான தீர்வுத் திட்டங்களை முன்வைத்திருந்தவர்களும் அவர்களது தீர்வுத் திட்டங்களும் தொடர்ச்சியாக மக்களால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
எனவே இது தொடர்பில் யாரும் பயப்படவோ அல்லது ஓடித்திரிய வேண்டிய அவசியம் இல்லை. வடமாகாண முதலமைச்சர் கடந்த மாகாண சபை தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பால் அடையாளம் காட்டப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்.
எனினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு முதலமைச்சர் ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக குறைந்தது மக்கள் மத்தியில் குழப்பமான சிந்தனையை ஏற்படுத்தும் வகையிலான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்.
எனினும் மக்கள் அதற்கும் குழப்பமடையாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே முழுமையாக ஆதரித்திருந்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.