பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது?
காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வரும் பெப்ரவரி மாதத்துடன் கலைக்கப்பட்டு, இந்த விவகாரங்களைக் கையாள்வதற்கான புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் வரும் 2016 பெப்ரவரி 15ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது. இந்தநிலையில், இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
“காணாமல்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையில் இந்த ஆணைக்குழுவை கலைக்கும்படி கோரப்பட்டுள்ளதால் ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
காணாமற் போனோர் தொடர்பாக அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. எம்மிடமுள்ள காணாமல்போனோர் தொடர்பான ஆவணங்களை இந்த அமைச்சிடம் கையளிக்கும்படி கோரப்படலாம்.” என்றும் அவர் தெரிவித்தார்.