நாளை மீண்டும் கூடுகிறது தமிழ் மக்கள் பேரவை
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழில் நடைபெறவுள்ளது. இதன்போது அரசியல் தீர்வுத்திட்ட வரைவைத் தயாரித்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப்பொறிமுறையை கண்காணித்தல் ஆகியவற்றுக்கான உபகுழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.
தமிழ்மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் வலியுறுத்துவதை நோக்காகக் கொண்டு கடந்த சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வைத்திய நிபுணர் பு.லக்ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் செயலாளர்.ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத் தலைமையாகவும் மதத் தலைவர்களையும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகவும் கொண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
தமிழ்மக்களின் நலன்கள், உரிமைகள், அபிலாசைகள் என்பவற்றை அடையும் பொருட்டும் அவற்றை அடையாளப்படுத்தும் பொருட்டும் அமைக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவையானது தேவையான கட்டமைப்புக்களுக்கும் துறைகளுக்கும் பொருத்தமான நிபுணர்களை இனங்கண்டு அவர்களை உள்ளடக்கியதான உபகுழுக்களை அமைத்துக்கொள்ளுமெனவும் இந்த உப குழுக்கள் தமக்குக் குறித்தொதுக்கப்பட்ட இலக்குகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்கும் என்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் உப குழுக்களின் பணிகள் நீண்டு செல்லும் பொருட்டு நிலைத்தவையாகவும் அமையுமெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் அரசியல், கல்வி, சுகாதாரம், சமுக பொருளதார அபிவிருத்தி, விவசாயம் மற்றும் மீன்பிடி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, கலைபண்பாடு ஆகியவற்றுக்கு உபகுழுக்கள் நியமிக்கப்படவுள்ளதோடு இவற்றை விடவும் தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் மற்றும் முக்கிய விடயங்கள் குறித்தும் பொருத்தமான உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே நாளைய தினம் நடைபெறவுள்ள இரண்டாவது கூட்டத்தில் முதற்கட்டமாக அரசியல் அமைப்பு வரைபு தொடர்பான உபகுழுவும், அரசாங்கம் முன்னெடுக்கும் உள்ளக பொறிமுறை தொடர்பாக கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் உபகுழுவொன்றை நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.