Breaking News

உடுத்துறையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி (படங்கள் இணைப்பு)

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமி புனித பூமியில் இன்று (சனிக்கிழமை) சுனாமி அனர்தத்தினால் உயிர்நீத்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

இன்று காலை 9 மணியளவில் உடுதுறையில் அமைந்துள்ள சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் கல்லறை அமைந்துள்ள பகுதியில் திரண்ட உறவினர்கள், கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

உடுத்துறை - ஆழிப்பேரலை நினைவிடத்தை புனித பிரதேசமாக அறிவிக்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் – உடுத்துறை பகுதியிலுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தினை புனித பிரதேசமாக அறிவிக்குமாறு வடமராட்சி மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு இன்று சனிக்கிழமை உடுத்துறையில் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த பகுதியை புனித பிரதேசமாக அறிவிக்குமாறும் அதற்கான வரைவு மற்றும் வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுமாறும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் உறுதிமொழிகளை மாத்திரம் வழங்கும் மக்கள் பிரதிநிதிகள், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியை புனித பிரதேசமாக மாற்றுவதற்கு தாம் 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுதியளித்துள்ளார்.

ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாம் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.