மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் எமது வரைவு - கூட்டமைப்பு கூறுகின்றது
வடக்குகிழக்கு மக்கள் எமக்கு பெரும்பான்மையான ஆணையை வழங்கியுள்ளனர். அதனடிப்படையிலேயே புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக எம்மால் சமர்ப்பிக்கப்படும் வரைவு அமையுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும், பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு பேரவையாக செயற்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார்.
இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக எவ்வாறான வரைபு சமர்ப்பணமொன்றை பாராளுமன்றில் செய்யவுள்ளது. அதற்கான செயற்பாடுகள் எவ்வாறுள்ளன என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அரசியல் தீர்வு தொடர்பாக நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அத்தகையதொரு தீர்வைப்பெற்றுக்கொள்ளும் முனைப்புடனேயே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அவ்வாறான நிலையில் புதிய அரசியல் அமைப்பு வரைபு செய்யப்படுவது குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் அனைத்து கட்சிகளும் தங்களது பரிந்துரை வரைபுகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரப்படவுள்ளது.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை அடைவதை மையப்படுத்திய புதிய அரசியல் அமைப்பு யோசனையை முன்வைப்பதற்கான கலந்துரையாடல்கள் செயற்பாடுகளை உத்தியோகப்பற்ற முறையில் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.
அவ்வாறிருக்கையில் அடுத்துவரும் காலப்பகுதியில் உரிய நேரத்தில் எமது நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்துவோம். எமது நிலைப்பாட்டிற்கே வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது பெரும்பன்மை ஆணையை வழங்கியுள்ளார்கள். ஆகவே எமது வரைபானது நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதனை அடிப்படையாகவும் மக்களின் ஆணைக்குட்பட்டதாகவுமே அமையும் என்பது நிச்சயம் என்றார்.