Breaking News

உடுத்துறையில் அஞ்சலி நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் - பொதுமக்கள் அதிருப்தி

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமி புனித பூமியில் இன்று (சனிக்கிழமை) சுனாமி அனர்தத்தினால் உயிர்நீத்தவர்கள் நினைவு கூரப்பட்டனர். இன்று காலை 9 மணியளவில் உடுதுறையில் அமைந்துள்ள சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் கல்லறை அமைந்துள்ள பகுதியில் திரண்ட உறவினர்கள், கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்த நினைவுதின அனுஷ்டான நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கு ஏற்றப்படும் என அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த அழைப்பின் பேரில் அரசியல் பிரமுகர்கள் விளக்கேற்றியதை தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து பின்னர், பிரதான சுடர் ஏற்றப்பட்டது.

நினைவுதின அனுஷ்டான நிகழ்வில் இவ்வாறு மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டமைக்கு கல்வியலாளர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று அந்நடவடிக்கையானது பொதுமக்கள் மத்தியிலும் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு புதிய விடயங்களை புகுத்த நினைப்பது தொடர்பில் அக்கறை செலுத்துவதை தவிர்க்குமாறு கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிர்நீத்த உறவுகளை நினைத்து உறவுகள் கண்ணீர் வடிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு மங்கள விளக்கேற்றல் தேவைதான எனவும் கல்வியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.