சர்வதேசத்தை ஏவிவிட்டு நாட்டை பிரிக்கும் முயற்சியில் வடமாகாண சபை - மஹிந்த குற்றச்சாட்டு
நல்லாட்சி என்ற பெயரில் வடமாகாண சபையும் அரசாங்கமும் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளினால் நாடு பிளவின் விளிம்பில் உள்ளது. சர்வதேசத்தை ஏவிவிட்டு நாட்டை பிரிக்க கடுமையான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாம் வெள்ளைவேன் கடத்தல் காரர்கள் என்றால் இவர்கள் கறுப்பு டிபென்டர் கடத்தல்காரர்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தார் இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எமது ஆட்சியை அராஜக ஆட்சியென விமர்சித்தவர்கள், நாம் கடத்தல் காரர்கள் என குற்றம் சுமத்தியவர்கள் இன்று நல்லாட்சியில் என்ன செய்கின்றனர். நாம் தமிழ் மக்களை கொடுமை படுத்தியதாகவும், ஆட்கடத்தல் அடக்குமுறை செயற்பாடுகளை செய்தமை மற்றும் வெள்ளை வேன் கடத்தல் என்பவற்றை மேற்கொண்டதாக குறிப்பிட்டனர்.
ஆனால் ஒருவருடமே கடந்த நிலையில் நல்லாட்சியில் கறுப்பு டிபென்டர் கடத்தல் ஆரம்பித்துள்ளது. மீண்டும் பாதாள கொள்ளையர்களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. ஆனால் இது தான் நல்லாட்சி என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அதேபோல் இன்று நாட்டின் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை என்பதே உண்மையாகும். நாம் பாதுகாத்த நாடு இன்று பிரிவினையின் விளிம்பில் நிற்கின்றது. வடக்கு கிழக்கில் தனி அதிகாரங்களும் ஏனைய பகுதிகளுக்கு வேறு அதிகாரங்களும் என்ற ரீதியில் தான் ஆட்சியை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் வடக்கில் நடக்கும் பிரிவினைவாத நகர்வுகள் தொடர்பில் மக்களுக்கு உண்மைகள் சென்றடையவில்லை. அதேபோல் சர்வதேசம் இலங்கையை எவ்வாறு நடத்துகின்றது என்பது தொடர்பிலும் மக்களுக்கு உண்மைகள் போய் சேரவில்லை.
அன்று வடக்கு மாகாண அதிகாரங்கள் தொடர்பில் வெளிப்படையாக பேச முன்வராத தலைமைகள் இன்று சர்வதேசத்தை ஏவிவிட்டு நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றன.
அதற்கு இந்த அரசாங்கமும் துணை போகின்றது. தமிழ் மக்களின் தலைவர்கள் எப்போதும் சர்வதேச நாடுகளை நம்பி ஏமாறும் நிலைப்பாட்டில் தான் உள்ளனர். அதேபோல் தமிழ் மக்களின் மத்தியில் தவறான கருத்துக்களை கொண்டு சென்று நாட்டில் தொடர்ச்சியாக முரண்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இவர்களின் முயற்சியை நாம் தொடர்ச்சியாக தோற்கடித்து வந்தோம்.
ஆனால் இந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், புலம்பெயர் அமைப்புகளின் தேவையை திருப்திப்படுத்தும் வகையிலுமே செயற்பட்டு வருகின்றது.
இன்று அரசாங்கமும் வடமாகாண சபையும் தமிழர் தரப்பும் முன்னெடுக்கும் முயற்சிகளினால் வெகு விரைவில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாழமுடியாத சூழல் ஏற்படும். சர்வதேச நாடுகளே மீண்டும் நாட்டினுள் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை சின்னாபின்னமாக்கி மூவின மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகள் தான் இப்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.