ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது
வவுனியாவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினர் குறித்த விடயம் தொடர்பில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று வியாழக்கிழமை வவுனியா நகரசபையால் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக மேற்கொள்ளப்பட்ட வியாபார நடவடிக்கைகள் அகற்றப்பட்ட போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தர்மலிங்கம் வீதியில் உள்ள புடவை வியாபார நிலையம் ஒன்றின் ஊழியர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் குறித்த ஊடகவியலாளரின் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சக ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் நீதிபதி முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வன்னி மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபேயவர்தனவை சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.