Breaking News

தமிழ்த்தேசியப் பத்திரிகையாளர், பதிப்பாளர் காமராச் மறைந்தார்


தமிழ்த்தேசியப் பத்திரிகையாளர்,
பதிப்பாளர் காமராச் மறைந்தார் சட்டவாளரும் தமிழ்த்தேசியப் பத்திரிகையாளரும் பதிப்பாளருமான கு.காமராச்சு, சென்னையில் இன்று (25 டிச.2015) காலை உயிரிழந்தார். 

நேற்று இரவு வர் தங்கியிருந்த திருவல்லிக்கேணி பகுதியில், நடந்த சிறு விபத்தே அவரின் உயிருக்கு ஆபத்தாக மாறிப்போனது. திருவல்லிக்கேணி அரசு கசுத்தூரிபா மகப்பேறு மருத்துவமனை முன்பாக, வேகமாக வந்த இருசக்கர வண்டியில் வந்த ஒருவன் மோதியதில், இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலுள்ளவர்கள் அவசரச்சிகிச்சை ஊர்தியை வரவழைத்து இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். 

குருதிப்போக்கு அதிகமானதால், உடனடியாக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். கூடுதல் மருத்துவப் பரிசோதனை செய்யும் அளவுக்கான குறைந்தபட்ச ரத்த அழுத்தம் இல்லாமல்போக, தீவிர சிகிச்சைக்கு வாய்ப்பிருந்தும் பலனில்லாமல் போனது. நினைவு திரும்பாதநிலையிலேயே உயிருக்குப் போராடிய காமராச்சு, இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். 

இவருக்கு பத்திரிகையாளர்கள் பாரதிதம்பி, கவின்மலர், சந்தானமூர்த்தி, (கருத்துப்படக் கலைஞர்) பாலா, அருள் எழிலன், எழுத்தாளர்கள் தீசுமாசு-டி-செல்வா, வே.மதிமாறன், மொழியியல் ஆய்வாளர் க.கசேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, சே. பாக்கியராசன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்து மறைந்த காமராச்சுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

நிறைவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மலர் மரியாதைக்குப் பின்னர், பிற்பகல் காமராச்சின் உடல் அவருடைய சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. எப்போதும் தலைக்கவசம் இல்லாமல் வண்டியோட்டாத அவர், இன்று மட்டும் கவசத்தை அணியாமல் போய்விட்டாரே என மருத்துவமனையில் திரண்டிருந்த நண்பர்கள் வேதனைப்பட்டனர். 

மறைந்த காமராச்சு, கோவை சட்டக்கல்லூரியில் படித்து 2006-ம் ஆண்டு பட்டம் பெற்றவர். கல்லூரி காலத்திலேயே தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன், ’சமூக விழிப்புணர்வு’ எனும் இதழைத் தொடங்கி, நடத்திவந்தார். 2009 ஈழத்தின் மீதான இனவழிப்புப் போர் உச்சமடையும்வரை தொடர்ச்சியாக வெளியான விழிப்புணர்வு இதழ், அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் மாற்றுக் கருத்துகளை முன்வைத்த சிறுபத்திரிகையாக விளங்கியது. 

சாதியொழிப்பு, தமிழ்த்தேசியம், பெண் உரிமை, சமூகநீதி, மதவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல தளங்களில் புலமையாளர்களின் கட்டுரைகளையும் நாட்டார் வழக்காறு, மொழிக்கூறுகள், தேசியப் பண்பாடு தொடபான புதுவகையான கட்டுரைகளையும் மட்டுமின்றி பெரியார்- அம்பேத்கரியரான வே.மதிமாறனின் கேள்வி-பதில்களையும் கதை, கவிதை என இலக்கியங்களையும் படைக்கச்செய்த மதிப்புக்குரிய பத்திரிகையாக விளங்கியது குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தின் மீதான இனவழிப்பு உச்சத்துக்குச் சென்றபோது, தமிழகம் முழுவதும் நீதிமன்றத்தில் வேலைநிறுத்தப் புறக்கணிப்புப் போராட்டத்தை சட்டவாளர்கள் வீச்சாக நடத்தியபோது, விழிப்புணர்வு இதழ் மூலமும் சீனாவின் முற்றுகையில் இந்தியா போன்ற சிறு புத்தகங்களைக் கொண்டுவந்து இன அழிப்புப் போரின் பின்னணியை மக்களிடம் கொண்டுசேர்த்தவர், காமராச்சு. முத்துக்குமாரின் தழல் ஈகத்துக்குப் பிறகு தமிழகத்தில் எழுந்த பேரெழுச்சியில், சீமான் பக்கம் நின்ற காமராச்சு, நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கியதிலும் பங்களிப்பு செய்தார். 

அவ்வியக்கத்தின் கருத்துப்பெட்டகமாகத் திகழ்ந்தவரை, எழுத்து/ பதிப்புப் பணி ஈர்க்கவும் அதிலேயே முழுமூச்சாகச் செயல்பட்டார். இயக்குநர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தபோது, அது குறித்து ‘கல்லறையில் ஒரு கருத்துரிமை’ எனும் நூலை வெளியிட்டார். தமிழக மின்சாரத் தட்டுப்பாடான சூழலில், அதற்குப் பின்னணியில் உள்ள உண்மைகளை தன் பதிப்பகத்தினூடாக வெளியீடுகளைக் கொண்டுவந்தார். அண்மையில் மதவாத அபாயம் எழுச்சிபெறத் தொடங்கியபோது, மதவாதப் பிரச்னையில் தமிழகக் கட்சிகளின் நிலையைப் பற்றி, நாடாளுமன்ற ஆவணங்கள் மூலமாக தோலுரித்துக்காட்டினார். 

கொள்கையளவில் சாதி, மதங்கடந்த தமிழ்த்தேசியம் என்றிருந்தவர், தன்னுடைய எழுத்து மூலமாகவும் மற்றவர்களை எழுதுவைத்து அவற்றை ஆவணப்படுத்தி வெளியிட்டதன் மூலமும் தமிழகத் தமிழ்ச் சமூகத்துக்குப் பங்காற்றிச் சென்றுள்ளார். சுப. உதயகுமாரன் உட்பட அவருடைய விழிப்புணர்வு இதழில் பங்களித்த பலரும் இன்று முன்னணி ஊடகங்களில் பரவலாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.