25 வருடங்களாக வீதியில் நிற்கும் மக்களை மீள்குடியேற்றாத அரசு தீர்வை முன்வைக்குமா? - யாழ்.ஆயர் கேள்வி
புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்கி அரசியல் தீர்வு கொண்டு வரப்படும் என அரசாங்கம் கூறுகின்றது. கடந்த 25 வருடங்களாக வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்ற தயக்கம் காட்டும் இந்த அரசாங்கம் தீர்வைக்கொண்டு வருமென எவ்வாறு நம்ப முடியும் என யாழ். மாவட்ட புதிய ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் கேள்வி எழுப்பினார்.
அண்மையில் யாழ். மாவட்ட ஆயராக பொறுப்பேற்றுக் கொண்ட வண.கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களிடம் வடபகுதி மக்கள் படும் இன்னல்கள் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பி கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த கால் நூற்றாண்டு காலமாக இடம்பெயர்ந்த மக்கள் தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கம் இதுவரை தீர்வைக்காணவில்லை. இவ்வாறு இருக்கும்போது புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்கி தமிழ் மக்களுடைய நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்று விரைவில் காணப்படுமென அரசாங்கம் கூறுவதை எப்படி தமிழ் மக்கள் நம்ப முடியும்? இதேபோன்றதொரு நிலைதான் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்திலும் காணப்படுகின்றது.
இது ஒருபுறமிருக்க தமிழ் அரசியல் தலைவர்களிடமோ அரசியல்வாதிகளிடமோ ஒற்றுமையில்லை. ஒரு கூட்டுப்போக்கில்லை. இவ்வாறானதொரு சமமற்ற சூழ்நிலையில் அரசியல் தீர்வு, கிடைக்கும் சுபீட்சமான எதிர்காலம் தமிழ் மக்களுக்கு கிடைக்குமென எதை வைத்து நம்ப முடியும்.
தமிழ் மக்கள் கடந்த பல தசாப்த காலமாக பட்ட துன்பங்களுக்கு நிரந்தர தீர்வொன்று காணப்பட வேண்டும். அந்த தீர்வு அரசியல் ஸ்திரம் கொண்டதாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் எப்போதும் பிரிந்து வாழ எண்ணம் கொண்டவர்கள் அல்லர். ஒரு தேசத்துக்குள் ஒன்று சேர்ந்த மக்களாகவே வாழ விரும்புகின்றார்கள். ஆனால் இந்நாட்டில் ஏனைய சமூகத்தவர் எத்தகைய உரிமைகளை கொண்டவர்களாக வாழுகின்றார்களோ அதேபோன்று சகல உரிமைகளைப் பெற்றவராக மதிப்புடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய ஓர் அரசியல் தீர்வொன்றையே வேண்டி நிற்கின்றனர். தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியான நிரந்தரமான தீர்வை அரசியல் வடிவில் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலமாக போராடி வந்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நியாயமானதும் நீதியுமானதுமான ஒரு தீர்வாகும். அந்த தீர்வை கொண்டு வருவதற்கு உரிய சாசனங்களை வரைந்து சட்டங்களை இயற்றி சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையொன்றை தற்போதைய புதிய அரசாங்கம் உண்டாக்கி கொடுக்க வேண்டும். இன்னும் புரியும்படி சொல்வதானால் சிங்கள மக்களை தமிழ் பேசும் மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மை சிங்கள மக்கள் கௌரவமாக நடத்த வேண்டும். இவ்வகை சூழ்நிலையே சிறந்த நல்லிணக்கமாக இருக்க முடியும். இத்தகையதொரு நற்சூழலை கொண்டு வரும் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இதிலுள்ள தர்மசங்கடமான நிலையென்னவென்றால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வொன்றை சிங்களத்தலைவர்கள் கொண்டுவர முயற்சி எடுப்பார்களானால் சிங்கள மக்கள் மத்தியில் தங்களுக்குரிய செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்ற அவர்களின் அச்சமாகும்.
இன்றைய அரசாங்கத்தை பொறுத்தவரை மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் நடைபெறவில்லையென்ற அதிருப்தியே காணப்படுகிறது. சகல விடயங்களிலும் இழுத்தடிப்பே காணப்படுகிறது. மீள்குடியேற்றப்படாமல் யாழ். மாவட்டத்தில் வலிகாமம், காங்கேசன்துறை, பலாலி, மயிலிட்டி, ஊறணி பிரதேச மக்கள் கடந்த 25 வருடங்களாக தெருவில்தான் நிற்கிறார்கள். இவர்களுக்கு ஒரு தீர்வை வழங்க முடியாத அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை எப்படி வழங்கப்போகிறது என்பது சந்தேகம் தருகின்ற விடயமே.
வடக்கிலுள்ள மக்கள் 34 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் வெளியேயும் தங்கி இருக்கிறார்கள். இவர்கள் குடியேற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் புதிய அரசாங்கம் இது சம்பந்தமாக முயற்சி எடுப்பதை எம்மால் காண முடியவில்லை. பெருந்தொகையான காணிகளில் இராணுவ முகாம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. இவை இன்னும் தேவையா? என்ற கேள்வியையே கேட்க வேண்டியுள்ளது.
1976ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நான் இப்பகுதிகளில் சேவகம் செய்தவன். மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் நான் நன்றாக அறிவேன். அப்படிப்பட்ட மக்களை கால்நூற்றாண்டுக்கு மேலாக தெருவில் நிறுத்தி வைத்துக்கொண்டு இன்னுமொரு தீர்வையும் வழங்காத இந்த அரசாங்கத்தை நாங்கள் எப்படி நம்புவது, தமிழ் மக்களால் எப்படி நம்ப முடியும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சர்வதேசமும் பல்வேறு ராஜதந்திரிகளும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்ற அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இம்முயற்சிகளின் பலன் எமக்கு கிடைக்க வாய்ப்புண்டு. போர்க்குற்ற விசாரணை தொடர்பாக கூறுவதானால் சர்வதேச விசாரணையொன்றுக்கு வருவதற்கு முன்னமே தற்போது குடாநாட்டில் இடம்பெற்றுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மக்கள் பயமின்றி சென்று தமது உறவினர்களுக்கு ஏற்பட்ட அபத்தங்களை அநீதிகளை தெளிவாக கூறுகின்றார்கள்.
இது முன்னேற்றகரமான செயற்பாடாகும். கடந்த அரசாங்க காலத்தில் மக்கள் அச்சத்தினால் சாட்சியமளிக்க முன்வரவில்லை. அப்படி அளித்தால் வெள்ளை வான் வந்து கடத்திக்கொண்டு போய்விடுமென்ற பயந்தான் அதற்கு காரணம். ஆனால் தற்போது நடைபெறும் விசாரணையில் மக்கள் துணிந்தவர்களாக யார் செய்தார்கள் எப்படி நடந்தது சம்பவத்தின் சூத்திரதாரிகள் யார் என பயமின்றி கூறியுள்ளார்கள். இது பெரியதொரு முன்னேற்றமாகும். இந்த சுதந்திரத்தை தற்போதைய அரசாங்கம் கொடுத்திருக்கிறது என்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
எனவே தான் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை இலங்கையரசாங்கம் உடனடியாக சாசன ரீதியாக வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்தையும் ராஜதந்திரிகளையும் விநயமாக கேட்டுக்கொள்கின்றேன். விசாரணைகளின் முடிவில் நல்லதொரு முடிவையும் மேற்படி சமூகம் எடுக்குமெனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
யாழ். புலத்தில் ஒரு சில அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மக்கள் மத்தியில் அதிருப்தியே வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வோமென்று புதிய அரசு வாக்குறுதி அளித்தது. அது நடைபெறவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உரிய வாழ்வாதாரம் உண்டாக்கிக் கொடுக்கப்படவில்லை. இந்திய மீன்பிடி படகுகளின் எல்லை தாண்டல் காரணமாக பெருந்தொகை மீனவக்குடும்பங்கள் வடக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளையில் கவலைக்குரிய விடயம் யாதெனில் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் ஒற்றுமையில்லை. இவர்கள் அனைவரும் மக்களின் நன்மை கருதி ஒன்று சேர்ந்து மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றுபட வேண்டுமென்பதே எமது மானசீகமான கோரிக்கையாகும்.
உதாரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அண்மைக்காலமாக மெல்லிய தனமாக முரண்பாடு வளர்ந்திருப்பது யாவரும் அறிந்த விடயமாகும். இந்த முரண்பாட்டை நிவர்த்தி செய்து சமாதானத்தை ஏற்படுத்த யாராவது முன்வர வேண்டும். என்னிடம் பலர் கேட்டார்கள் இப்பணியை தாங்களே முன்னின்று செய்யுங்களென்று. நான் அவர்களுக்கு கூறினேன் தற்போது தான் ஆயர் பதவியை பொறுப்பேற்று உள்ளேன்.
அது சார்ந்த கடமைகளை செய்ய முடியாது இருக்கிறது. உரிய கடமைகளை செய்து முடித்து விட்டு உரிய முயற்சிகளை மேற்கொள்வேன் என கூறியுள்ளேன். தற்பொழுது வடகிழக்கிலுள்ள சகல மக்களும் இவ்விவகாரம் தொடர்பில் கவலை கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள். கிடைத்திருக்கும் நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்து போகப்போகிறோமோ என்பது அவர்களின் கவலையாகும்.
வடக்கு முதல்வருக்கும் கூட்டமைப்புக்கிடையேயுள்ள உறவு நிலை விரிசல் சம்பந்தமாக நாங்கள் யாரையும் தனிப்பட்ட வகையில் குற்றம் சாட்ட முடியாது. குற்றம் சாட்டுவது அவசியமற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை தமிழ் மக்களின் நன்மை கருதியே அவர்கள் சிந்திப்பார்கள். இதேவேளை வடக்கு முதல் அமைச்சரை பொறுத்தவரை வடக்கில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளை காரசாரமாக அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறுவார்.
மற்றவர்கள் மென்தன்மையுடன் கூறும் விடயங்கள் முதல் அமைச்சர் நீதியரசராக பணிபுரிந்த காரணத்தினால் யதார்த்தமாக கூறுவது இயல்பு. உள்ளதை தனது பாணியில் அவர் கூறியிருக்கலாம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம். எவ்வாறு இருந்த போதும் இரு தரப்பினருக்குமிடையில் விரைவில் புரிந்துணர்வு ஏற்படுமென்று நம்புகின்றேன்.