Breaking News

ராஜபக்ச குடும்பம் தொடர்பில் 25 விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – மங்கள

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அல்லது அவரது குடும்பம் தொடர்பிலான 25 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச மற்றும் அவரது குடும்பம் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விசாரணைகள் நிறைவுபெற சிலகாலம் எடுக்குமெனவும், விசாரணைகளுக்கு பல்வேறு வழிகளில் தடைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அந்த வங்கிகள் அமைந்துள்ள அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும், இதற்கு கால அவகாசம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பிலான 725 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சியமைத்த நாள் முதல், சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் மிகச் சிறந்த முறையில் உறவுகளை பேணி வருவதாகவும், வெளியுறவுக் கொள்கைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் கனடா மற்றும் பிரித்தானிய பிரதமர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தமையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.