கூட்டமைப்பை பிளவுபடுத்தும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய எந்தத் தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
”தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மிகவும் பலமான கட்சி. தமிழ் மக்களின் பிரதான கட்சியும் அதுவேயாகும்.
இத்தகைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இரண்டாக பிளவுப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை நாம் வழங்கவுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் அந்த கட்சி பலமாக செயற்பட வேண்டும்.
எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய எந்தவொரு தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது.தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இனவாத போக்குடன் செயற்பட கூடியவர்களுக்கும், நடுநிலைப் போக்கினை கொண்டிருப்பவர்களுக்கும் இடையிலேயே பிரச்சினை காணப்படுகிறது.
இந்த இரண்டு தரப்புகளுக்கும் பெரும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதன்காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.இதனை பிளவு என்று கூறவும் முடியாது. கருத்து வேறுபாடு மாத்திரமே” என்றும் அவர் கூறியுள்ளார்.